சென்னை: அதிமுக ஆட்சியில் காணாமல் போனதாக கூறப்பட்டு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட 2.38 லட்சம் டன் நிலக்கரி விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
கடந்த 10ஆண்டுகால அதிமுக ஆட்சி ஊழலு மிகுந்த ஆட்சி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பலமுறை கூறி வந்ததும், ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து ஊழல் புகார் பட்டியல் வழங்கியதும் அனைவரும் அறிந்ததே. தேர்தல் சமயத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால், அதிமுக அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என்று மக்களிடம் கூறி வாக்கு கேட்டார் முதல்வர் ஸ்டாலின. அதுபோல தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது.
தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக அரசு பதவி ஏற்றதுமுதல், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி உள்பட பலரது வீடுகளில் ரெய்டு நடைபெற்ற நிலையில், முன்னாள் முதல்வர்எடப்பாடி மீதும் கொடநாடு கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. அதுபோல, புளியந்தோப்பில் கட்டப்பட்டுள்ள தரமற்ற குடிசை மாரிய குடியிருப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஓபிஎஸ்மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறையில் நடைபெற்ற வாக்கிடாக்கி கொள்முதல் ஊழல், ‘அனல்மின் நிலைய நிலக்கரியில் ஊழல், என அடுத்தடுத்து விசாரணையை தொடர தமிழகஅரசு காவல்துறையை முடுக்கி விட்டுள்ளது.
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன், மேலாண்மை இயக்குநர் சண்முகம் மற்றும் தலைமை பொறியாளர்களுடன் நேற்று, திருவள்ளுர் மாவட்டம், அத்திப்பட்டு, வடசென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி கிடங்குகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழக மின்சார வாரியத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதில், சிறப்பாக வடசென்னை அனல் மின் நிலையம் அலகு-1, 100 நாட்களை கடந்து தொடர் மின்சார உற்பத்தியை செய்து சாதனை படைத்து வருகிறது என்று கூறியவர், . இந்த சாதனை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது 2013-14-க்கு பிறகு 100 நாட்களைத் தாண்டி தொடர் மின்சார உற்பத்தியினை செய்து வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், நிலக்கரி கிடங்கில் இருப்பு சரிபார்க்கப்பட்டதில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் மட்டும் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதற்கும் இருப்பில் உள்ளதற்கும் வித்தியாசம் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பணியை இயக்குநர் (உற்பத்தி), இயக்குநர் (விநியோகம்) மற்றும் தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய மூன்று பேர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் அடிப்படையில் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பில் இல்லை என்ற தகவல் கிடைக்கப்பெற்று உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை கூறினார்.
மேலும், இது முதற்கட்ட ஆய்வுதான், மேலும், மேலும் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளது, நிலக்கரியில் என்னென்ன முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்பது குறித்து முழுவதுமாக கண்டறியப்பட்டு நிச்சயம் யாராக இருந்தாலும் அவர்களின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கப்படும் நிலக்கரி கப்பல் மூலம் எண்ணூர் கொண்டு வரப்பட்டடு, . அங்கிருந்து கண்வேயர் பெல்ட் மூலம் எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அதில் கடந்த 3 மாதத்தில் எவ்வளவு நிலக்கரி பயன்படுத்தப்பட்டது, எவ்வளவு மீதம் இருக்கிறது என்று கணக்கிடப்பட்டபோது தான் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமானது தெரியவந்துள்ளது.
ஒரு கப்பலில் 70 ஆயிரம் டன் நிலக்கரி கொண்டு வரலாம். அப்படி என்றால், 3 கப்பலில் இருந்து கொண்டு வரப்படும் அளவுக்கான நிலக்கரி மாயமாகியுள்ளது. இது இந்தோனேஷியா அல்லது ஒடிசாவில் இருந்து கப்பலில் கொண்டு வராமல், கொண்டு வந்ததாக கணக்கு காட்டினார்களா அல்லது கடந்த சில மாதங்களாக கப்பலில் கொண்டு வரப்படும் நிலக்கரி குறைவாக கொண்டு வரப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி பதில்
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி பதில் அளித்துள்ளார்.
அதிமுக அரசு எடுத்த கணக்கைத்தான் அதாவது நாங்கள் கண்டுபிடித்ததைத்தான் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். நிலக்கரி தட்டுப்பாடு வந்தநேரத்தில் ஆய்வு செய்தபோதே நிலக்கரி குறைந்திருந்த விவகாரம் தெரியவந்தது. கடந்த ஆட்சியிலேயே 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை என கணக்கெடுத்தோம்.
எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியிலும் பயமில்லை. யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன் என கூறினார். மேலும், மின் உற்பத்திக்காக வாங்கிய கடன் குறித்து நானும் விளக்கம் அளித்துள்ளேன்.
நிலக்கரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின்போது வாய்ப்பு அளித்தால், பேரவையிலேயே விளக்கம் அளிக்கத் தயார்.
கடந்த அதிமுக அரசை குறைகூற வேண்டும் என்பதற்காகவே செந்தில்பாலாஜி இந்தக் குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
1991-1996ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போதும் நிலக்கரி ஊழல் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நிலக்கரி முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.