பொள்ளாச்சி:  பொள்ளாச்சி அருகே உடுமலையில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது  காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்துள்ளனர்.  இந்த சம்பவம், அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி பாலியம் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதுபோன்ற பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு காரணம் டிஜிட்டல் வளர்ச்சி என்று கூறப்பட்டாலும், மற்றொருபுறம் போதை பொருள் நடமாட்டம் என்று கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் சந்துபொந்து, மூலை முடுக்கெல்லாம் போதை பொருள் கலாச்சாரம் பரவி வருகிறது. ஏற்கனவே மதுவுக்கு அடிமையாகி வரும் தமிழ்நாடு சமீப காலமாக போதைபொருளுக்கு அடிமையாகி வரும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக, பாலியல் வன்முறை, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இதன் தொடர்சியாக உடுமலைபேட்டை பகுதியில்,  17 வயது சிறுமி  ஒருவரை  3 சிறுவர்கள் உட்பட 9 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அந்த சிறுமி கர்ப்பமான நிலையில், இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, பெற்றோர் இல்லாததால் தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக வாந்தியும், மயக்கமுமாக இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த பாட்டி, சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துள்ளார். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து சிறுமியை விசாரித்தபோது 3 சிறுவர்கள் உட்பட 9 பேர், தன்னை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளார். இதை அடுத்து உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் இந்த பாலியல் புகார் தொடர்பாக, உடுமலை பகுதியை சேர்ந்த ஜெய காளீஸ்வரன் (19), மதன்குமார் (19), பரணி குமார் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவா பாரதி (22) மற்றும், 14, 15. மற்றும் 16 வயதுடைய 3 சிறுவர்கள் என மொத்தம் ஒன்பது பேரை போலீஸா போக்சோ சட்டத்தின் கீழ்ர் கைது செய்தனர்.

அடுத்து, இவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில், சிறார்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. ஆனால், குற்றங்களை நிரூபிக்க முடியாமல் நீதி விசாரணையில் குற்றமிழைத்தோர் தப்பித்து விடுவதாக குழந்தை நல செயற்பாட்டாளர்கள் வேதனை‌ தெரிவிக்கின்றனர்.

தேசிய குற்ற ஆணவங்கள் காப்பகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி தமிழகத்தில், பாலியல் வல்லுறவு, பாலியல் சீண்டல் உள்பட பல்வேறு போக்சோ குற்றங்களில், 2015இல் 1,064 வழக்குகளில், 0 – 18 வயது வரையுள்ள 1,080 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2018இல், 1,458 வழக்குகளில், 1,466 குழந்தைகளும், 2019இல் 1,747 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கொரோனா பரவல் தொடங்கிய, 2020ல் தமிழகத்தில், 3,143 வழக்குகளில், 3,145 குழந்தைகள் மற்றும் 2021இல் 4,415 வழக்குகளில், 4,416 குழந்தைகள் பாலியல் ரீதியிலான பாதிப்பை சந்தித்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டை கொரோனாவுக்கு முந்தைய 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழகத்தில் இரண்டு மடங்கு வழக்குகள் அதிகரித்துள்ளன. பதிவான வழக்குகளிலேயே இத்தனை குழந்தைகள் என்றால், நடந்ததை வெளியில் சொல்லாமல் அல்லது வழக்குப் பதிவு செய்யாமல் விட்டதில் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.

தமிழகத்தில் பாலியல் குற்றவாளிகள் மீது  போக்சோ வழக்கு பதிவு செய்வது மட்டுமே நடக்கிறது, அதன்பின் வழக்கு விசாரணை எந்த நிலைக்கு செல்கிறது என எந்த அமைப்பும் முழுமையாக கண்காணிப் தில்லை, “ அரசின் அதிகாரப்பூர்வ தகவலின் படி தமிழகத்தில் பதிவான போக்சோ வழக்குகளில் ஆண்டுக்கு, 14 – 18 சதவீதம் மட்டுமே தண்டனை விகிதமாக உள்ளது. இது மிகவும் மோசமான நிலை. என குழந்தைகள் உரிமைகள் செயற்பாட்டாளரும் ‘தோழமை’ அமைப்பின் இயக்குநருமான தேவநேயன் குற்றம் சாட்டி உள்ளார்.

கல்வியில் முதலிடம், தொழில்வளர்ச்சியில் முதலிடம் என்று கூறும் தமிழ்நாடு அரசு, பாலியல் குற்றங்கள் உள்பட குற்றச் சம்பவங்களில்  எத்தனாவது இடம் என்பதை தெரிவிக்க மறுத்து விடுகிறது. இதனால் தமிழ்நாட்டின் இளைய தலைமுறை, திக்குதெரியாமல் சீரழிந்து வருகிறது.

தமிழ்நாடு அரசும், காவல்துறையும், அரசையும், ஊழல்கள் குறித்து  விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் ஆர்வம் காட்டுவதை விட்டுவிட்டு, குற்றச் சம்பவங்கள், போதைபொருள் நடமாட்டம், பாலியல் சம்பவங்கள் போன்றவை நடைபெறாதவாறு தடுப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
https://patrikai.com/nearly-one-of-ten-of-school-girls-have-been-sexually-harassed-in-chennai-doctors-research-information/