பாபநாசம்.
கும்பகோணத்தை அடுத்த பாபநாசம் இந்தியன் வங்கியில் பணம் எடுப்பதற்கு வரிசையில் காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
வங்கியில் பணம் எடுக்கவந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால், அவரது மனைவி உதவி கோரியும், யாரும் அவருக்கு உதவாமல்  பணம் எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். ஒருசில மேதாவிகள் அவர் நெஞ்சுவலியால் துடித்து உயிரிழந்ததை  வீடியோ எடுத்தனர்.
மக்களிடம்  மனிதாபிமானம் செத்துவிட்டது என்பதை இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வங்கியில் உயிருக்கு போராடும் முதியவர் மனைவில் மடியில்..
வங்கியில், மனைவியின் மடியில்  உயிருக்கு போராடும் முதியவர் ..

கடந்த 8ந்தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று மத்தியஅரசு அறிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். பழைய பணத்தை மாற்றவும், புதிய பணம் பெறவும் நாட்கணக்கில் வங்கிகளின் வாசலிலும், ஏடிஎம் வாசலிலும் கால்கடுக்க காத்து கிடக்கின்றனர்.
கடந்த 25 நாட்களாகியும் இதுவரை பணப்புழக்கம் சரியாகவில்லை. காரணம் மத்திய அரசு புதிய ரூபாய் நோட்டுக்களை தேவையான அளவு புழக்கத்தில் விடவில்லை என்று எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றனர்.
நேற்று மேற்கு வங்காளத்தில் அரசு ஊழியர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்ற போது மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
கும்பகோணம் கபிஸ்தலத்தை அடுத்த வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சுப்பிரமணியன். இவர் தனது சேமிப்பில் உள்ள பணத்தை எடுப்பதற்காக மனைவியுடன் அங்குள்ள இந்தியன் வங்கிக்கு சென்றுள்ளார். பணம் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு நடுவே அவரும், அவரது மனைவியும் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் வரிசையில் கால்கடுக்க நின்ற முதியவர் சுப்பிரமணியனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அருகில் நின்ற அவரது மனைவி தையல்நாயகி, கணவரை தன் மடியில் வைத்துக் கொண்டு உதவிக் கேட்டுள்ளார். ஆனால், முதியவரின் உயிரை யாரும் பொருட் படுத்தவில்லை. மக்கள் தாங்கள் பணம் எடுப்பதிலேயே குறிக்கோளாக இருந்தனர். ஒருசிலர் இதை மொபைல் போனில் வீடியோவாக எடுத்துக் கொண்டிருந்தனரே தவிர உதவிக்கு யாரும் முன்வர வில்லை.
இதுகுறித்து வங்கி ஊழியர்கள் 108க்கு புகார் செய்தனர். அவர்களும் நீண்ட நேரம் கழித்தே வங்கிக்கு வந்தனர். அவர்கள் முதியவரை சோதனை செய்துவிட்டு, அவர்  உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
வங்கிக்கு பணம் எடுக்க வந்த இடத்தில் மனைவியின் மடியில் முதியவர் உயிர்விட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மோடி அறிவித்துள்ள இந்த பணப்பிரசசினை காரணமாக  இந்தியா முழுவதும்  இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.