சென்னை: இந்தாண்டிற்கான தென்மேற்கு பருவமழை ஜுன் மாதம் 1ம் தேதி துவங்கும் என்றும், 104% வரை மழைக்கான வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவ மழை துவங்கும். அக்டோபர் 15ம் தேதி மழை முழுமையாக விலகும். ஆண்டுதோறும், நாடு முழுமைக்கும் சேர்த்து சராசரியாக 88 செ.மீ. மழைப் பொழியும்.
இந்த ஆண்டும் வழக்கமான மழையில், 96% முதல் 104% வரை பொழிவதற்கு வாய்ப்புள்ளது. மழை பெய்வதற்கான அடுத்தக் கட்ட கணிப்பானது வரும் மே மாதத்தில் வெளியிடப்படும்.
இந்த ஆண்டைப் பொறுத்தவரை, பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில், பருவ மழைக்கு சாதகமான ‘எல் நினோ’ என்ற கடல் சூழல் நிலவுகிறது. இந்த சூழலை கடலியல் நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழைக்கான உத்தேச தேதியை, 2019 வரையிலான 40 ஆண்டு நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில், ஜூன் 1ம் தேதி பருவமழை துவங்கும்.
சென்னைக்கு ஜூன் 4ம் தேதி மழை வந்தடையும். கர்நாடகாவுக்கு ஜூன் 4ம் தேதியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு 8ம் தேதியும், மராட்டிய மாநிலத்திற்கு 12ம் தேதியும், குஜராத்திற்கு 19ம் தேதியும் வந்தடையும் என்ற உத்தேசப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.