சென்னை: அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையையும், கரோனா கொள்முதல்கள் குறித்து தனியாக ஒரு வெள்ளை அறிக்கையையும் முதல்வர் பழனிசாமி வெளியிட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“கொரோனாவின் கொடூரமான பிடியில் சிக்கி, தொழில் முதலீடுகள் இன்றியும், வருமானத்தை இழந்தும், வேலைவாய்ப்புகள் இல்லாமலும் தடுமாறி, தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக, ‘தமிழக அரசு எடுத்த முயற்சிகளால் தமிழகம், நாட்டின் முக்கிய முதலீட்டு மையங்களில் ஒன்றாக மாறியுள்ளது’ என்று முதல்வர் பழனிசாமி உண்மை நிலையைத் திரித்து, தனக்குத் தானே ஒரு பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருப்பது கற்பனையை விஞ்சுவதாக இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 6.46 லட்சத்தைத் தாண்டி விட்டது. அதிமுக ஆட்சியில், மாநிலத்தின் கடன் 4.56 லட்சம் கோடியைத் தாண்டி, இந்த ஆண்டில் மேலும் 50 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. போதாக்குறைக்கு மவுனமாக இருந்து, சந்தையில் இன்னும் கடன் வாங்கிக் கொள்கிறோம் என்று ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநிலத்தின் நிதி உரிமையை ‘சரண்டர்’ செய்திருக்கிறார் முதல்வர்.
இதுவரை நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாடுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்னவென்றே இதுவரை மாநில மக்களுக்குத் தெரியவில்லை. அனைத்துத் திசைகளிலும் எல்லா துறைகளிலும் படுதோல்வி கண்டு, மூழ்கும் கப்பலில் அமர்ந்து கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி, ‘முதலீடுகளை ஈர்த்து விட்டோம்’, ‘புதிய தொழில்களைத் தொடங்கி விட்டோம்’ என்று தமிழக மக்களின் காதில் பூ சுற்றும் வேலையில் இறங்கியிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்கள் மட்டுமே 5,000பேருக்குக் குறைவாக கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 19 மாவட்டங்களில் 10ஆயிரம் முதல் 1.79லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளே கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவலம் அதிமுக அரசால் உருவாகி விட்டது.
தலைமைச்செயலகத்தில் 200 பேர் பாதிப்பு, 200 நாட்கள் ஊரடங்கு கடந்த நிலையிலும் இன்றைக்கு நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் இரண்டாவது மாநிலமாகத் தமிழகம்!
ஒட்டுமொத்த நாட்டில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 77 சதவீதம் பேர், தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில்தான் இருக்கிறார்கள்! இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் முதல்வரின் கொரோனா நிர்வாகத்தில் மட்டுமல்ல; அனைத்திலும் ஏற்பட்டுள்ள தோல்வியை அம்பலப்படுத்தியுள்ளது.
அக்டோபர் முதல் வாரத்தில் 10 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் நோய்த் தொற்றுப் பரவலின் தீவிரத்தால், இன்றைக்கு 70 ஆக உயர்ந்துவிட்டது. இவற்றில் அம்பத்தூரில் மட்டும் 50 சதவீத கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருக்கின்றன. தண்டையார்பேட்டை பகுதியில் திடீரென்று 500 பேருக்கு மேல் பாதிக்கப்படும் நெருக்கடி உருவாகி விட்டது. அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையிலேயே இன்றைய பாதிப்பு நிலவரம் இருக்கிறது.
ஜூன் மாதம் 1,000 பேராக இருந்த கொரோனா மரணம், ஆகஸ்ட் 1 ஆம் தேதி 4,000 ஆக அதிகரித்து, இன்றைக்கு 10 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இறப்பு சதவீதம் 1.6 சதவீதமாக அதிகரித்து, இறப்பு எண்ணிக்கையில் இன்றைக்கு முதல்வரின் சேலம் மாவட்டமே தமிழக மாவட்டங்களில் ஆறாவது இடத்திற்கு முன்னேறி விட்டது.
ஆகவே, கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காட்டுத் தீ போல் இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்துவதில் அரசின் தோல்வியை மறைக்க, பொய் சொல்லும் நிலைக்கு அதிமுக அரசு வந்துவிட்டது என்பது வேதனைக்குரியது.
அதிமுக அரசிடம் கரோனா முன்கள வீரர்கள் எத்தனை பேர் பாதிப்பு என்ற கணக்கே இல்லை. எத்தனை மருத்துவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற கணக்கும் இல்லை. முன்கள வீரர்களுக்கு அறிவிக்கப்பட்ட உதவித்தொகையும் கொடுக்கப்படவில்லை.
கொரோனா சோதனை கணக்குகள் மாவட்ட அளவிலும் இல்லை, மாநில அளவில் அரசு சொல்லும் கணக்கிலும் உண்மைக்குப் பெரும் பஞ்சம்! கொரோனா நோயாளிகளுக்குத் தரமற்ற உணவு, கரோனா தொற்றுக்குள்ளானவர்கள் வீட்டில் தகரம் அடிப்பதில் கூட பிரச்சினை. அதைக்கூட முறையாகச் செய்யத் தவறி இப்போது நீதிமன்றத்தின் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது அதிமுக அரசு.
இத்தனை தோல்விகளையும் அரங்கேற்றி, கொரோனா தொற்றின் உச்சகட்டத்திற்கு, குறிப்பாக 5,000 பேருக்குக் குறையாமல் தினமும் தொற்று வரும் அளவுக்குத் தமிழ்நாட்டைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ள முதல்வர் பழனிசாமி செய்வது என்ன? மாவட்டங்களுக்குக் கட்சியினரைச் சந்திக்கச் செல்கிறார், அதுவும் அரசு செலவில்!
அமைச்சர்கள் ஊர் ஊராக உறுப்பினர் சேர்க்கை, ஆலோசனைக் கூட்டம் போடுகிறார்கள். ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டம் போடுகிறார்கள். அதிமுக தலைமைக் கழகத்தில் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு என்று தெருத்தெருவாகப் பட்டாசு வெடிக்கிறார்கள். சாலைகளை மறித்து, பேருந்துகளை மறித்து இனிப்புக் கொடுத்து கொண்டாட்டம் போடுகிறார்கள். ஆனால், இவை எதிலும், முகக்கவசமும் அணிவதில்லை. தனிமனித இடைவெளியும் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
அரசு வகுத்துள்ள கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைக் காற்றில் பறக்க விடுவோர் அதிமுக அமைச்சர்களும், முதல்வரும்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!
அமைச்சர்களும், முதல்வருமே பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்வதால், மக்களிடம் கொரோனா பற்றி ஏற்பட்ட விழிப்புணர்வும் மங்கிப் போய், கொரோனா வேகமாகப் பரவுவதைத் தடுக்க, முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று உயர் நீதிமன்றமே கேள்வி கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது.
ஆகவே, தனது கொரோனா நிர்வாகத் தோல்வியைத் திசைதிருப்ப, முதல்வர் பழனிசாமி போடும் நாடகங்கள் எடுபடாது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு விட்டோம் என்று கூறி இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. வெளிநாடுகளுக்குப் பயணம் சென்று முதலீடுகளைக் கொண்டு வந்துவிட்டோம் என்று பொய்களை அள்ளி வீச முடியாது.
கொரோனா காலப் பொருளாதாரத் தேக்க நிலைமை குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜனின் அறிக்கையையே வெளியிடத் துணிச்சல் இல்லாத முதல்வர் பழனிசாமி, உலக முதலீட்டாளர் மாநாடுகள் இரண்டிலும் போடப்பட்ட ஒப்பந்தங்களால் வந்த முதலீடுகள் எவ்வளவு? உருவாக்கிய வேலைவாய்ப்புகள் எவ்வளவு? என்பது குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட முடியாத முதல்வர், ‘தமிழகத்தை முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக மாற்றிவிட்டோம்’ என்று கூறுவது நல்ல வேடிக்கை! நான்காண்டு காலத்தில் தனது ஆட்சியின் தோல்வியை மறைக்கும் முயற்சி!
ஆகவே, முதல்வருக்கு உள்ளபடியே தைரியமிருந்தால், இதுவரை அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஊழலின் சுரங்கமாக இருக்கும் கரோனா கொள்முதல்கள் குறித்து தனியாக ஒரு வெள்ளை அறிக்கையை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அப்போதுதான் கொரோனாவை விடக் கொடுமையானது, ஆபத்தானது இவர்கள் செய்திருக்கும் ஊழல்கள் என்பதை மக்கள் மன்றம் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும். வெள்ளை அறிக்கைகள் எப்போது வரும்?”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.