புதுடெல்லி: புதிய மக்களவை அமைக்கப்பட்டு 9 மாதங்கள் நிறைவடைந்த பின்னரும், துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் ஏன் நடத்தப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்றபோது, 3 மாதங்களில் துணை சபாநாயகர் தேர்வு நடத்தப்பட்டு, மூன்றவாது பெரிய கட்சியான அதிமுகவுக்கு அப்பதவி வழங்கப்பட்டது.
எனவே, இம்முறையும், இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸை விடுத்து, மக்களவையின் மூன்றாவது பெரிய கட்சியான திமுகவுக்கு அப்பதவி வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தொடக்கத்திலேயே எழுந்தது.
ஒருவேளை திமுக அப்பதவியை ஏற்கவில்லை என்றால், நான்காவது பெரிய கட்சியான ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர் கட்சிக்கு வழங்கப்படலாம் என்றும் யூகங்கள் எழுந்தன.
ஆனால், இனிவரும் நாட்களில் துணை சபாநாயகர் தேர்வு நடத்தப்பட்டால், அப்பதவி ஒடிசாவின் பிஜு ஜனதாதளத்திற்கு செல்லும் என்று தகவல்கள் கூறுகின்றன.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில், துணை சபாநாயகர் தேர்வு நடைபெறும் என்று பாரதீய ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.