சென்னை: கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள கல்லூரி & பல்கலை தேர்வுகள், அடுத்த பருவத்தின்(செமஸ்டர்) துவக்கத்தில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, அனைத்து கல்லூரிகளுக்கும், கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதனால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வழக்கமாக நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தமிழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், தமிழக மாணாக்கர்களைத் தவிர, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணாக்கர்களும் படிக்கின்றனர்.

எனவே, அனைத்து மாணாக்கர்களின் நலனையும் கருதி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும், அடுத்த செமஸ்டர் பருவத்தின் துவக்கம் அல்லது அடுத்த கல்வி ஆண்டின் துவக்கத்தில் நடத்தப்படும்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகள் திறக்கப்படும் தேதி எது என்பது தமிழக அரசால் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் காரணமாக, கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், வரும் ஜூன் மாதம்தான் மீண்டும் திறக்கப்படும் என்பது முடிவாகிவிட்டதாவே கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, மாணாக்கர்களுக்கு தற்போது கோடை விடுமுறைதான் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.