டெல்லி: தடுப்பூசி விலை உயர்வு குறித்து மாநிலங்களுடன் விவாதிக்கப்பட்டதா?, பிரச்சினைகள் சரியாகும்போது, தங்களை புகழ்ந்து கொள்வதும், அதிகரிக்கும் போது, மாநில அரசை குறைசொல்வதுமே மோடிஅரசின் வாடிக்கை, இது அவரது திறமையின்மையின் விளைவுதானே- என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்தார்.
பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள சோனியாகாந்தி, கொரோனா 2வது அலை இந்தியாவை உலுக்கி வருகிறது, மக்கள் பீதியிலும் சோகத்திலும் துயரத்திலும் உழன்று வருகின்றனர். இந்த இக்கட்டான தருணத்தில் ‘உயிர்களைக் காப்பாற்றுவோம்’ ஒரு அம்சத் திட்டமாக அரசு, அரசுசாராத சமூக ஊழியர்கள் உள்பட அனைவரின் கவனமும் இருக்க வேண்டும்.
தேசிய நெருக்கடி ஏற்பட்டுள்ள தருணத்தில் பலரது கருத்துகளையும் அறிவுரைகளையும் கேட்க வேண்டும், ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற அணுகுமுறை பயனளிக்காது.
பிரதமர் மோடி ஈவு இரக்கமின்றி கொரோனா தடுப்பூசி கொள்கையை அரசியலாக்கி வருகிறார். உண்மையான நிலவரத்தை மறைப்பதில் ம.பி., உ.பி., குஜராத் அரசுகள் முன்னிலை வகிக்கின்றன. ஆனால் உண்மைகள் புறக்கணிக்கப்பட்டன. அதை நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்கனவே எச்சரித்திருந்தது. பிப்ரவரி தொடக்கத்தில் வெளிநாட்டு உள்நாட்டு மருத்துவ நிபுணர்கள் கொரோனா இரண்டாம் அலை குறித்து எச்சரித்தனர்.
ஆனால் அதை கண்டுகொள்ளாமல் மோடி அரசின் தற்புகழ்ச்சியும் அலட்சியமும் மேலோங்கி இருந்தது. கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவும் நிகழ்வுகள் அனுமதிக்கப்பட்டன, அதன் அபாயம் புரியாமல் கொண்டாடப்பட்டன.
நாட்டில் தொற்று நோயால் கஷ்டப்படும் கோடிக்கணக்கான மக்களுக்காக அனைத்து உதவிகளையும் பெற்றுத் தர வேண்டும். அனைவரும் தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்கும் வகையில், கொரோனா தடுப்பூசி மிகப்பரவலாக அனைவருக்கும் போடப்பட வேண்டும், அதன் வேகத்தை மேலும் அதிகரிக்க வேண்டும், இதுவே இப்போதைய தேசிய முயற்சியாக இருக்க வேண்டும்.
விஷயங்கள் சிறப்பாக வருவதாகத் தோன்றும்போது,அதன்பலனை தனதாக்கி கொள்ளும் மோடி அரசு மோசமாகத் தொடங்கும் போது, இது மாநிலங்களின் பிரச்சின என குற்றம் சாட்டுகிறது.
நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை எழுந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் தடுப்பூசியின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் விலை நிர்ணயம் எப்போதாவது மாநிலங்களுடன் விவாதிக்கப்பட்டதா? உண்மையில் இந்த விலை நிர்ணயம் முழு அர்த்தமும் இல்லை & கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது
ஆனால் உண்மையில், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு, மோடி அரசின் திறமையின்மையே காரணம். அவரது ஆட்சியின் பிரதிபலிப்புதான் தற்போது வெளிப்பட்டுள்ளது.
அரசுக்கு எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதும் தெரியவில்லை. உதாரணத்துக்கு பாராளுமன்ற கட்டிட செண்ட்ரல் விஸ்டா திட்டம் இப்போது தேவைதானா? என்றவர், அரசுக்கு மக்கள் பற்றி உணர்வும் இல்லை, நாங்கள் குறை மற்றும் குற்றம் கூறும் அரசியலை விடுத்து உதவிகள், நிவாரணங்கள் பற்றியே சிந்தித்து வருகிறோம். எங்களால் முடிந்த உதவியைச் செய்து வருகிறோம் என்று கூறினார்.