சென்னை: தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையரை நியமிக்கும் செயல்பாட்டை தமிழக அரசு இன்னும் நிறைவுசெய்யாமல் தாமதம் செய்து வருகிறது.
விண்ணப்பத்திற்கான கடைசித் தேதி நிறைவடைந்து ஒருமாத காலத்திற்கு மேலாகிவிட்டாலும், ஸ்கிரீனிங் நடைமுறை துவங்கிவிட்டதா? என்பதே இன்னும் உறுதியாகவில்லை. விண்ணப்பங்கள் அனைத்தும் கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்கு திரும்ப திரும்ப அனுப்பிவைக்கப்பட்ட விசாரணைகளுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இந்தப் பதவிக்கான நபரை தேர்வுசெய்வதற்கு இதுவரை எத்தனை விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்று கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா பிரியா, தனது பதவிகாலத்தை நிறைவுசெய்ததை ஒட்டி, தலைமை தகவல் ஆணையர் பணியிடம் கடந்த சில மாதங்களாகவே காலியாக உள்ளது.
அதேசமயம், இந்தப் பதவிக்கு யாரேனும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி அல்லது ஐஏஎஸ் அதிகாரிதான் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசுத்துறை வட்டாரங்களிலிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமை தகவல் ஆணையரை, முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து முடிவுசெய்து நியமனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.