சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்  தேதி விரைவில் அறிக்கப்பட உள்ள நிலையில்,   இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு இன்று சென்னை வருகை தருகிறார்.

தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக் உடன், தேர்தல் பணிகள், எஸ்ஐஆர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் தகிக்கத்தொடங்கி உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி,  திமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் சீர்திருத்தம் பணிகளை மேற்கொண்டது. இதையடுத்து, தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த நிலையில்  இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு , இன்று (பிப்ரவரி 11 ஆம் தேதி) சென்னை வருகிறார.. அவரது வருகையின் போது, தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியுடன் நேரடியாக ஆலோசனை நடத்தி, தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்க  இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனையில்,  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான நிர்வாக ஏற்பாடுகள், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு நிலை, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் போன்ற விஷயங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் பானு பிரகாஷ் எத்துரு கேட்டறிவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 30 ஆம் தேதி வரை நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதில், லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து, பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விடுபட்ட வாக்காளர்கள் விண்ணப்பித்து, தங்களின் பெயர்களை சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

பொதுவாக, தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தேர்தல் ஆணையர்கள் நேரில் ஆய்வு மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துருவின் வருகை தமிழ்நாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது. அவர் மேற்கொள்ளும் ஆலோசனைகள், தேர்தல் நடைமுறைகளை மேலும் துல்லியமாகவும் வெளிப்படையாகவும் நடத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் தமிழ்நாடு வருகை தந்து ஆய்வு மேற்கொள்கின்றனர். அப்போது அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்துவர். அதன்பிறகே தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

[youtube-feed feed=1]