டெல்லி:

பாஜ எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜ மூத்த தலைவர் அத்வானி கலந்துகொண்டார்.


எதிரிகள் சொத்து சட்டம் தொடர்பாக சிறப்பு உத்தரவு அல்லது அவசர சட்டம் கொண்டு வரும் மசோதா குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த மசோதா நிறைவேறினால் பாகிஸ்தான் மற்றும் சீனாவில் குடியேறியவர்களின் சொத்துக்களை மாற்றம் செய்வது உள்ளிட்ட விஷயங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பாக உபி.யில் அதிகளவில் ராஜா மகமுதாபாத் என்பவருக்கு சொத்துக்கள் உள்ளது. அவர் இந்தியாவில் இருந்து வெளியேறி ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வசித்தார். அரசுடமையாக்கப்பட்ட இந்த சொத்துக்களை எதிர்த்து அவரது குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த குடும்பத்திற்கு ஆதரவாக கடந்த 2010ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இது தொடர்பான அந்த அவசர சட்டம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு ராஜ்யசபாவில் நிறைவேறாமல் உள்ளது. மேலும், அவசர சட்டம் வரலாற்றில் இல்லாத வகையில் 5வது முறையாக ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் பிரனாப் முகர்ஜி தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

இந்த மசோதாவை நிறைவேற்ற சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோருடன் பேச தயாராக இருக்கிறேன் என்று அத்வானி, மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, ரவி சங்கர் பிரசாத், ஆனந்த் குமார் ஆகியோரிடம் கூட்டத்தில் அனுமதி கேட்டார்.
நீண்ட நாட்களாக அதிருப்தியில் இருந்த அத்வானி தற்போது தாமாக முன்வந்து மத்திய அமைச்சர்களை வழிமறித்து இவ்வாறு கேட்டது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.