தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் 07.05.2018 அன்று அடிக்கல் நாட்டினர். இதையடுத்து அ.தி.மு.க-வினரால் மெரினா காமராஜர் சாலை முழுவதும் விளம்பர பலகைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதியடைந்தனர்.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மருத்துவமனை செல்வதற்காகச் அந்த வழியாகச் சென்றார். அப்போது அந்த பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் கண்டு, “உடனடியாக விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும்” என்று போராட்டத்தில் இறங்கிவிட்டார்.
இந்த நிலையில் அங்கு வந்த அதிமுகவினர் சிலர் டிராபிக் ராமசாமியை கடுமையாக தாக்கினர்.
இது குறித்து டிராபிக் ராமசாமியிடம் பேசினோம். அவர், “அடையாரில் உள்ள மருத்துவமனைக்கு செக் அப்புக்காக சென்றுகொண்டிருந்தேன். மெரினா சாலை முழுவதும் வைக்கப்பட்டிருந்த பேனர்களால் பெரும் போக்குவரத்து நெரிசல். மக்களுக்கு கடும் அவதி. இந்த நிலையில், மேலும் பேனர்களை வைப்பதற்காக சாலை யோரத்தில் குழிகளை தோண்டிக்கொண்டிருந்தனர்.
பேனர்களை உடனடியாக அப்புறபடுத்தி போக்குவரத்துக்கு நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் காவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் நான் எனது காரின் மேல் ஏறி அமர்ந்துகொண்டு பேனர்களை எடுக்குமாறு முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டேன். அப்போது அங்கிருந்த காவலர்கள் அ.தி.மு.க உயர்மட்ட நிர்வாகிகளுக்கு போன் செய்தனர். அடுத்த கால்மணி நேரத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் சிலர் அங்கு வந்தனர். அவர்களில் சில பெண்களும் இருந்தனர். அவர்கள் என்னைத் தாக்க முற்பட்டனர். நானோ `பேனரை அகற்றாவிட்டால் இங்கிருந்து நகரமாட்டேன்’ என்று உறுதியாக கூறினேன்.
உடனே அவர்கள் கட்டையாலும், துடைப்பத்தாலும் என்னை அடிக்கத் தொடங்கினர். காவலர்கள் அந்தத் தாக்குதலை வேடிக்கை பார்த்தார்களே தவிர, தடுக்கவில்லை. அடித்தவர்களையும் கைதுசெய்யவில்லை. மாறாக, என்னை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
சாலையில் வைக்கப்படும் பேனர்களால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் என்று மக்களுக்கு அவதி. இதை எதிர்த்து கேட்டால் ஆளுங்கட்சியினர் அடிக்கிறார்கள், காவல்துறையினர் வேடிக்கை பார்க்கிறார்கள்” என்றார் வேதனையுடன்.