ஐதராபாத்
வாட்ஸ்அப் மூலம் குழந்தை கடத்துபவர்கள் பற்றி பரவும் வதந்தியால் தெலுங்கானாவில் ஒரு திருநங்கை அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் குழந்தையை கடத்துபவர் என சந்தேகித்து ஒரு மூதாட்டியை சிலர் அடித்துக் கொன்ற செய்தி பலருக்கு நினைவிருக்கலாம். வாட்ஸ்அப் மூலம் பரவும் செய்தியினால் தவறாகப் புரிந்துக் கொண்டு அந்த மூதாட்டியையும் அவருடன் வந்தவர்களையும் பலர் தாக்கி உள்ளனர். இதே போல் மற்றொரு மொழி தெரியாத நபர் ஒருவரும் கொல்லப்பட்டார்.
தற்போது இதே போல செய்திகள் தெலுங்கானாவில் பரவி வருகிறது. எங்கோ நடந்த குழந்தைக் கடத்தல்கள் வீடியோ பதிவுகள் தற்போது தெலுங்கானாவில் நடப்பதாக பொய்யான தகவல்களுடன் இவை பதியப்படுகின்றன. இதை நம்பி மக்கள் பலர் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக திருநங்கைகள் குழந்தைகளை கடுத்துவதாக இந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது ரம்ஜான் மாதம் என்பதால் பல திருநங்கைகள் உதவி கேட்டு உலவி வருகின்றனர். அவ்வாறு பெண் உடை அணிந்த ஒரு திருநங்கை தனது இரு நண்பர்களுடன் ஐதராபாத் புறநகர் பகுதியில் அனைவரிடமும் பிச்சை கேட்டு வந்துள்ளார். சுமார் 52 வயது மதிக்கத்தக்க அந்த திருநங்கையின் இயற்பெயர் சந்திரையா என்பதாகும்.
அவர்கள் மேல் சந்தேகம் கொண்ட ஒரு கும்பல் அவர்களை தாக்கி உள்ளது. டயர் மற்றும் கற்களினால் அவர்கள் மூவரும் தாக்கப்பட்டுள்ளனர். அதைக் கண்ட சிலர் காவல்துறையினரிடம் புகார் அளித்ததில் அவர்கள் மீட்கப்ப்ட்டுள்ளனர். மருத்துவமனையில் சந்திரையா மரணம் அடைந்துள்ளார். உடன் வந்த இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு வதந்தியால் தெலுங்கானாவில் அப்பாவிகள் மரணம் அடைவது இது நான்காம் முறை ஆகும்
அருகில் இருந்த ஒரு கடையில் கண்காணிப்பு காமிரா மூலம் இந்நிகழ்வு பதிவாகி உள்ளது. அதில் இந்த மூவரையும்சுமார் 30-35 பேர் அடங்கிய கும்பல் தாக்குவது தெரிய வந்துள்ளது. அந்த வீடியோ பதிவைக் கொண்டு குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.