WhatsApp group admin arrested over morphed photo of PM

 

கர்நாடகாவில், பிரதமர் மோடியை தரக்குறைவாக சித்தரிக்கும் படத்தை வெளியிட்டதற்காக வாட்ஸ்ஆப் குரூப்பை இயக்கி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த குரூப்பில் படத்தை பதிவிட்டது தொடர்பாக மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

 

கிருஷ்ணா என்ற ஆட்டோ ஓட்டுநர் வாட்ஸ்ஆப் குரூப்பை இயக்கி வந்துள்ளார். அவர் நடத்தி வந்த வாட்ஸ்ஆப் குரூப்பில், பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சிக்கும் படம் வெளியிடப்பட்டதாக ஆனந்த் மஞ்சுநாத் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த வாட்ஸ்ஆப் குரூப்பை ஆய்வு செய்த காவல்துறையினர் பிரதமர் குறித்த படம் வெளிவந்திருப்பதை உறுதிசெய்தனர். இதையடுத்து குரூப் அட்மின்னான கிருஷ்ணாவையும், அதில் படத்தை வெளியிட்டு, பகிர்ந்த கணேஷ் நாயக், பாலகிருஷ்ணா நாயக் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் பாலகிருஷ்ணாவைத் தவிர மற்றவர்கள் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

 

கர்நாடாகாவைப் பொறுத்தவரை வாட்ஸ்ஆப்பில் தவறான தகவல் பதிவிட்டதற்காக மேற்கொள்ளப்படும் முதல் கைது நடவடிக்கை இதுஎனக் கூறப்படுகிறது. வாரணாசி நீதிமன்ற நீதிபதி ஒருவர் அண்மையில், வாட்ஸ்ஆப்பில் சமூகக் குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் தகவல்களை பதிவிடுவோர் மீது எப்ஐஆர் பதிவு செய்யலாம் என உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. வாட்ஸ்ஆப் குரூப்பை இயக்குவோர்  இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நேரடியாக அறிமுகமில்லாதவர்களை தங்களது குரூப்பில் இணைப்பதைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. இல்லாவிட்டால் இப்படி கம்பி எண்ண வேண்டியதுதான்!

 

_______________________________________________________________________________________________