வாஷிங்டன்

வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் செய்திகளை அழிக்க கொடுக்கப் பட்ட 7 நிமிட கால அவகாசம் ஒரு மணி நேரமாக நீட்டிக்கப் பட உள்ளது.

முதலில் வாட்ஸ்அப் மூலம் அனுப்பபடும் செய்திகளை அழித்தால் அது நமது மொபைலில் மட்டுமே அழிக்கப்படும் என்னும் நிலை இருந்தது.    அதை பெறும் நபர்கள் மற்றும் குழுவில் இருந்து அப்போது அந்த செய்தி அப்படியே அழிக்காமல் இருக்கும்.   அதன் பிறகு வாட்ஸ்அப் கொண்டு வந்த புதிய அமைப்பின் படி அந்த செய்திகளை அனைவருக்கும் அழிக்க வசதி வந்தது.

ஆனால் அவ்வாறு அழிக்க நினைப்பவர்கள் செய்தி அனுப்பி 7 நிமிடங்களுக்குள் அழித்தால் மட்டுமே செய்தி அனைவரது மொபைலில் இருந்தும் நீக்கப்படும்.   தற்போது சோதனை முயற்சியாக அந்த கால அவகாசத்தை வாட்ஸ்அப் நீட்டித்து உள்ளது. ஆண்டிராய்ட் மொபைல் களில் ஒரு குறிப்பிட்ட வெர்ஷனில் இயங்கும் மொபைல்களில் மட்டும் தற்போது அந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஆண்டிராய்ட் 2.18.69 பீட்டா வெர்ஷனில் இயங்கும்  மொபைலில் உள்ள வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் செய்திகள் அதை அனுப்பி 4096 வினாடிகள் அதாவது 68 நிமிடம், 16 வினாடிகள் வரை அனைவரும் பார்க்க முடியாதபடி அழிக்க முடியும்.     விரைவில் இந்த வசதி வாட்ஸ்அப் உபயோகிக்க்கும் அத்தனை மொபைலுக்கும் விரிவாக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.