200 கோடி பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலி பயன்பாட்டில் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது, பிப்ரவரி 8 ம் தேதிக்குள் அதை ஏற்றுக்கொள்ளாத பயனர்கள் இந்த செயலியை தொடர்ந்து செயல்படுத்த முடியாது.
2014ம் ஆண்டு 50 கோடி பயனர்களுடன் செயல்பட்டு வந்த வாட்ஸ்அப் நிறுவனத்தை 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கிய பேஸ்புக் நிறுவனம், 2016 ம் ஆண்டு வரை இதில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
2016ம் ஆண்டு முதல், வாட்ஸ்அப் பயனர்களின் தகவலை பேஸ்புக் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தன, இதற்காக பயனர்களிடம் அனுமதியும் பெற்றது, இதற்கு சம்மதிக்காத பயனர்களையும் சேவையை தொடர்ந்து பயன்படுத்த வாய்ப்பளித்தது.
பயனர்களின் பெயர், புகைப்படம், தொலைபேசி எண்கள் மற்றும் பயனரின் தொடர்பில் உள்ள எண்கள், ஐ.பி. முகவரி, செயலி பயன்பாடு விவரம், ஸ்டேட்டஸ் தகவல்கள், என்று அனைத்தையும் சேகரிக்க துவங்கிய இந்த நிறுவனம்.
இவற்றை, தன் இணை நிறுவனங்களான, பேஸ்புக் பேமென்ட், ஓனவோ, கிரௌட் டாங்கில் போன்ற நிறுவனங்களுக்கு வழங்கியது.
இந்நிலையில், 2018 ம் ஆண்டு வாட்ஸ்அப் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஜன் கவும், பயனர்களின் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க தகவல்களை சேகரிக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து, புதிய பயன்பாட்டு கொள்கையை தற்போது வெளியிட்டிருக்கும் வாட்ஸ்அப் நிறுவனம், இதனை கட்டாயமாக்கியுள்ளதோடு இதனை ஏற்றுக்கொள்ளாத பயனர்கள் இந்த செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்றும் அறிவித்துள்ளது.
நண்பர்கள், உறவினர்கள் மட்டுமல்லாது தொழில்முறை தொடர்புகளுடனும் வாட்ஸ்அப்-பை அதிகளவு பயன்படுத்தி வரும் இந்தியர்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து வாட்ஸ்அப்-பை வணிக சேவை செயலியாக மாற்றும் சோதனையில் இறங்கி இருக்கிறது பேஸ்புக் நிறுவனம்.
பயனர்களின் தொழில் தொடர்பு குறித்து அறிந்து கொண்டு அவர்களுக்கான விளம்பரங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்ப இந்த புதிய பயன்பாட்டு கொள்கையில் வழி செய்திருக்கிறது இந்நிறுவனம்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை விட்டு ‘சிங்கள்’, ‘டெலிக்ராம்’ உள்ளிட்ட மாற்று செயலிகளுக்கு தாவிச்செல்ல வாய்ப்பு இல்லை என்பதை தரவுகள் மூலம் அறிந்துகொண்ட பேஸ்புக் நிறுவனம் தற்போது கட்டாய பயன்பாட்டு கொள்கை என்ற கிடுக்கி பிடியை போட்டுள்ளது.
இந்த புதிய கொள்கையை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே பிப்ரவரி 8 ம் தேதிக்கு பின் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியும், மற்றவர்கள் வேறு செயலிகளுக்கு மாறவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.