லாஸ்ஏஞ்சலிஸ்: ‘டிக்டாக்’ வணிகத்தை அமெரிக்காவில் விலைக்கு வாங்கும் போட்டியில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இப்போட்டியில், தற்போது ஆரக்கிள் நிறுவனம் வெல்லும் என்று தகவல்கள் கூறுகின்றன.

டிக்டாக் நிறுவனத்தின் வர்த்தகம், செப்டம்பர் 20ம் தேதிக்குள் ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கப்படாவிட்டால், அது தடை செய்யப்படும் என அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதையடுத்து, டிக்டாக்கின் அமெரிக்க வணிகத்தை, அதன் தாய் நிறுவனமான சீனாவைச் சேர்ந்த ‘பைட்டான்ஸ்’ நிறுவனத்திடமிருந்து வாங்க, மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் உள்ளிட்ட நிறுவனங்கள் முன்வந்தன.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக, டிக்டாக்கின் அமெரிக்க வணிகம் தங்களுக்கு விற்கப்பட மாட்டாது என்று பைட்டான்ஸ் தெரிவித்துள்ளதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும், ஆரக்கிள் நிறுவனத்துடன் எத்தகைய ஒப்பந்தத்தை, பைட்டான்ஸ் மேற்கொள்ள இருக்கிறது என்பது குறித்து இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

இதனையடுத்து, ‘அமெரிக்காவில் டிக்டாக்கின் நம்பகமான தொழில்நுட்ப பங்குதாரர் ஆரக்கிள்’ என்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அது ஒரு முழுமையான விற்பனையாக இருக்காது என்றும் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, சீன அரசாங்கத்தின் வெளிப்படையான அனுமதியின்றி, டிக்டாக் தன் தொழில்நுட்பத்தை வெளிநாட்டினருக்கு மாற்ற இயலாது. இதன் காரணமாக, தரவுகள் உள்ளிட்ட வற்றின் பாதுகாப்பை அமெரிக்காவுக்கு உறுதிப்படுத்தும் வகையில், ஏதாவது ஒரு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்தை கூட்டாளியாக்கவே, டிக்டாக் முயலும் என்றும் சொல்லப்படுகிறது. ஆரக்கிள் நிறுவனம் என்ன செய்ய இருக்கிறது என்பது குறித்து, இதுவரை அதன் தரப்பில் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.