புதுக்கோட்டை: சசிகலா பெங்களூருவில் இருந்து தமிழகம் புறப்பட்டு விட்டார், அதனாம் நாம் நினைத்தது கண்டிப்பாக நடந்தே தீரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 3 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழகஅரசியல் கட்சிகள் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. திமுகவில், அதன் கூட்டணிகள் சர்ச்சையின்றி தொடர்ந்து வரும் நிலையில், அதிமுகவில் கூட்டணி கட்சிகள் சலசலப்பை உருவாக்கி உள்ளன. இந்த நிலையில், தற்போது சசிகலாவும் சிறை தண்டனை முடிவடைந்து, அதிமுக கொடியுடன் தமிழகம் திரும்பிவரும் நிலையில், அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் திமுக தலைமை, சசிகலாவின் வருகையால் தங்களுக்கே ஆதாயம் என நம்புகிறது.
சசிகலா அதிமுக கொடி பயன்படுத்த அதிமுக அரசு தடை போட்டும், அதை மீறி அவர் அதிமுக கொடியுடனேயே பயணித்து வருகிறார். தனது மாஸை அதிமுக தலைமைக்கு தெரிவிக்கும் வகையில், வரும் வழி முழுவதும் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டமாக வந்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு தான் வருகிறேன். தற்போது பெங்களூரில் இருந்து சசிகலா அதிமுக கொடியுடன் புறப்பட்டு விட்டார். என்ன நடக்கப் போவது என்று தெரியவில்லை, ஆனால் எது நடக்க வேண்டுமோ அது கண்டிப்பாக நடந்தே தீரும் என்று தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் வருகை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தும், அதனால் வாக்கு வங்கி சிதறும் என திமுக உள்பட பல கட்சிகள் எதிர்பார்த்து வருகின்றன. ஆனால், சசிகலா அரசியலுக்குள் வருவதை தடுக்க அதிமுக பல் வழிகளில் முயற்சி செய்து வருகிறது. அவற்றையும் கடந்த சசிகலா வருகை தருகிறார். இது எடப்பாடி தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. சசிகலாவின் வருகை திமுகவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிமுக இரண்டுபடுவது திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில்தான் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என ஏற்கனவே கூறியிருந்தேன். அது தவறு. 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்’’ எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். சசிகலா- எடப்பாடி தரப்புக்கு இடையே எழுந்துள்ள மோதலை கருத்தில் கொண்டே மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்திருப்பதாக கூறப்பட்டது.
தனது கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் த.சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின்,
“தமிழகத்தில் 3 மாதத்தில் திமுக ஆட்சியில் அமர உள்ளது. அதற்கு அடிப்படையாக அனைத்து தொகுதிகளிலும் மக்களின் குறைகளை கேட்க வேண்டும் என திமுக வியூகம் அமைத்து பிரச்சாரம் செய்து வருகிறது. தவழ்ந்து வந்து தமிழகத்தின் முதல்வராக பழனிசாமி வந்தாரா? இல்லையா?. இதை அவர் மறுத்தால் எனது கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.
பெங்களூருவில் இருந்து ஒருவர் கொடியுடன் புறப்பட்டுவிட்டார். என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை. ஆனால், நடக்க வேண்டியது நடக்கும். இதில், எந்த மாற்றமும் இல்லை” என கூறினார்.
சசிகலாவின் வருகையால் திமுக அமோக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.