சென்னை:
ஊரடங்கு காரணமாக மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்களை, தாயகம் அழைத்து வர உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையைத் தொடர்ந்து, அவர்கள் நாடு திரும்ப எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து பதில் அளிக்க மத்திய, மாநில அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா உள்பட உலக நாடுகள், விமான சேவைகளை முடக்கி உள்ளன. இந்த நிலையில், சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு சென்ற 350 க்கும் மேற்பட்ட இந்தியர்கள், அங்கிருந்து இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
அவர்களின் சுற்றுலா விசா காலம் முடிவடைந்த நிலையில் தங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும்படி மலேசிய தூதரகத்திற்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. இது தங்களுக்கு மன உலைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகவும், உடனடியாக மத்திய மாநில அரசு கால தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுத்து இந்தியா திரும்ப வழிவகை செய்ய உத்தரவிடக் கோரி மலேசியாவில் சிக்கியுள்ள முல்லைநாதன் சார்பில் வழக்கறிஞர் ஞானசேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அமர்வு, மலேசியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.