டெல்லி: அமித் ஷா மகன் ஜெய்ஷா பிசிசிஐ செயலாளராக ஆக என்ன தகுதி இருக்கிறது என்று கண்ணையா குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஜேஎன்யூ முன்னாள் மாணவர் தலைவர் கண்ணையா குமார், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், அவரது மகன் ஜெய்ஷாவையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஜேஎன்யூவில் படிப்பதற்கு மாணவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை நாங்கள் சொல்கிறோம். ஏழ்மையான ஏழைகளின் குழந்தைகள் மற்றும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த பல்கலைக் கழகத்திற்கு படிக்க தகுதியானவர்கள்.
இன்று வரை மின்வசதி இல்லாத கலஹாண்டி பகுதியில் மாணவர்கள் படிக்க வருகிறார்கள். அவர்கள் ஆங்கிலம் படிக்கிறார்கள், நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள்.
ஆனால் நீங்கள் (அமித் ஷா) தகுதி பற்றி பேசுகிறீர்கள்? உங்கள் மகன் ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராக என்ன தகுதி இருக்கிறது? அவரது தகுதி என்ன? அவர் எப்படி பிசிசிஐ செயலாளராக நியமிக்கப்பட்டார்?
தீபிகா படுகோனே மோடியை பற்றி பேசவில்லை. அமித்ஷா பற்றி கூறவில்லை. காயம்பட்ட மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார். ஆனாலும் அவரது படத்தை ஏன் புறக்கணிக்கிறார்கள்? ஏன் என்றால் இந்த அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள் இந்த பல்கலைக்கழகத்துக்குள்ளும் இருக்கின்றார்கள் என்றார்.