கொழும்பு: கடவுச்சீட்டு எனப்படும் பாஸ்போர்ட்டை புதிதாகப் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கையில், பெண்கள் நெற்றிப் பொட்டுடன் படமெடுப்பதை தவிர்ப்பது அவசியம் என்று இலங்கையின் சிங்கள அரசாங்கம் பிறப்பித்துள்ள உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புகைப்படங்கள் எனப்படுபவை ஒரு நபரின் இயல்பான தோற்றத்துடன் ஒத்திருக்க வேண்டும் என்ற சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்ற நோக்கத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.
சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பானது, பாஸ்போர்ட் புகைப்படம் தொடர்பாக வகுத்துள்ள விதிமுறைகளில், இயற்கையான தோற்றத்தை மறைக்காத வகையில் புகைப்படம் எடுக்கப்பட வேண்டுமென்பது முக்கியமானது.
அதேசமயம், மருத்துவ மற்றும் மதக் கோட்பாடுகளின் காரணமாக, தலைமுடியை மூடியிருக்கலாம் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.