சிட்னி: பந்தைப் பளபளப்பாக்குவதற்கு எச்சில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டிருப்பதானது, பேட்ஸ்மென்களுக்கான சாதகத்தை அதிகரித்து, போட்டியின் சமநிலையைக் குலைத்துவிடும் என்று கவலை தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர்.

தற்போதைய கொரோனா சூழலில், கிரிக்கெட்டி போட்டிகளில் பந்தை பளபளப்பாக்குவதற்கு எச்சில் பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பலரும் பலவிதங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் மார்க் டெய்லர் கூறியிருப்பதாவது, “எச்சிலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள சூழலானது எனக்கு கவலையை அளிக்கிறது. ஏனெனில், பேட்டிங் – பவுலிங் இடையிலான சமநிலையை இது சீர்குலைத்துவிடும்.

டெஸ்ட்டைப் பொறுத்தவரை, பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவது எனக்குப் பிடிக்கும். எச்சில் இல்லாத நிலையில், பந்தைப் பளபளப்பாக்கி ஸ்விங் செய்வது கடினம்,  இதனால், பேட்ஸ்மென்கள் அதிக ரன் குவிக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.

டெஸ்ட் போட்டிகளில், ஒரு அணியின் ரன் எண்ணிக்கை 300க்குள் இருந்தால் மட்டுமே சுவாரஸ்யமாக இருக்கும்” என்றார் மார்க் டெய்லர்.