டெல்லி: டெல்டா பிளஸ் வைரஸை தடுக்க மோடி அரசிடம் திட்டம் உள்ளதா, அதன் பரவலை தடுப்பூசிகள் எந்த அளவுக்கு தடுக்க உதவும் என மத்தியஅரசிடம், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
கொரோனா 2வது அலை குறையத்தொடங்கி உள்ள நிலையில், 3வது அலை விரைவில் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், உருமாறிய நிலையில் டெல்டாபிளஸ் வைரஸ் பரவல் பரவி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 40க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மத்தியப்பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் 3 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு இருப்பதாக அமைச்சர் மா.சு.கூறியுள்ளார்.
இந்த நிலையில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சில கேள்விகளை எழுப்பி டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில்,
டெல்டா பிளஸ் வைரஸை கண்டறியவும், தடுக்கவும் அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாதது ஏன்?
டெல்டா பிளஸ் வைரஸை தடுக்க தடுப்பூசிகள் எந்த அளவுக்கு உதவும்?
இது தொடர்பான முழு விவரம் எப்போது கிடைக்கும்?
கொரோனா 3வது அலையை தடுக்க என்ன திட்டம் உள்ளது?
என்று பதிவிட்டுள்ளார்.