ட்விட்டரில் ஆரம்பித்த கமலின் அரசியல், “தனிக்கட்சி துவங்குவேன்”, “முதல்வர் ஆவேன்” என்று அறிவிக்கும் அளவுக்க வளர்ந்து நிற்கிறது. இடையே கேரள முதல்வர் பினராய் விஜயன், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்று ஆளுமைகளின் சந்திப்புகள் தொடர்கின்றன.

“அரசியலே வேண்டாம்” என்ற கொள்கையில் இருந்த கமல் முழு நேர அரசியல்வாதியாக ரசமாற்றம் ஆகிக்கொண்டிருப்பது ஆச்சரியம் என்றால்… இத்தனைக்குப் பிறகும் அவரது ரசிகர்கள் கண்ணியமாய் மவுனம் காப்பது அதிசயம்தான்.

ஆம்..இதுவே வேறு நடிகர்களில் அரசியல் பிரவேசம் குறித்து.. கொட்டாம்பட்டி கிளைக்கழக உறுப்பினர்கூட கருத்து சொல்வதும் அது மீடியாக்களில் ஒளிபரப்பாவதையும் கண்டு ரசித்திருக்கிறோம்.

இங்கோ கட்டுப்பாடான அமைதி.

இந்த நிலையில் தஞ்சை மாவட்ட கமல் ரசிகர் மன்ற தலைவர் சரவணனிடம் பேசினோம்.

 

நடிகர் அரசியலுக்கு வரப்போகிறார் என்றால், ரசிகர்களின் உற்சாகம் சொல்லி மாளாது. ஆனால் உங்கள் மன்றத்தில் அமைதி நிலவுகிறதே..எப்படி

“பொதுநல பணிகள்தான் செய்து வருகிறோமே தவிர மன்றத்தில் எவருக்கும் அரசியல் ஆசை கிடையாது. அப்படித்தான் கமல் சார் எங்களை வளர்த்தார். அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தபோது எங்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

இந்த அரசியல்வாதிங்க பண்ண கூத்துத்தான், கமல் சார் அரசியலுக்கு வர காரணம்.  அவங்க ஒழுங்கா இருந்தா நாம நம்ம வேலையை பார்த்திக்கிட்டு இருந்திருப்போம்.

தவிர தெரிஞ்சோ தெரியாமலோ இந்த மோசமான அரசியல்வாதிங்க கமல் சாரை டிஸ்டர்ப் செஞ்சுட்டாங்க. அது நல்லதா போச்சு. இப்போ அவரால நல்ல மாற்றம் வரப்போகுது.

அதே நேரம் மன்றத்தினரான எங்களுக்கு எம்.எல்.ஏ ஆகணும், எம்.பி. ஆகணும் என்கிற ஆசைகள் கிடையாது.

கமல்

நடிகராக திரைத்துறையில் வெற்றி பெறுவது என்பது வேறு. அரசியல்.. அதுவும் முதல்வர் வேட்பாளர் என்றால் பெண்கள் வாக்குகளும் தேவை. அவர்களது ஆதரவு கமலுக்கு கிடைக்குமா?

திரைப்படத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் கமலை பெண்கள் விரும்பமாட்டாங்க.  என் வீட்டிலும் அப்படித்தான். ஆனா இன்னைக்கு நிலைமை தலைகீழாயிடுச்சு. கமல் அரசியலுக்கு வரணும்னு எல்லா பெண்களும் விரும்பராங்க. நல்ல மாற்றம் வரணும்.. அதுக்கு கமல்தான் சரியான ஆள் என்று எல்லோருமே நினைக்கிறாங்க.

திருமணம் என்கிற கட்டுப்பாடுக்கு ஆட்படாதவர் கமல். இது அவர் இமேஜூககு மைனஸ் ஆக இருக்காதா..

கமல் சார் தன்னுடைய கொள்கை, கோட்பாடு எதையும் பிறர் மீது திணித்ததில்லை. அவர் நாத்திகர். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. நெற்றியில குங்குமம் வச்சுகிட்டு அவர் பக்கத்தில நின்னிருக்கேன் அவர் ஏதும் சொன்னதே இல்லை.

அதில்லை…  திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாத அவரது குணம் எதிர்மறையான இமேஜை கொடுக்காதா..

எம்.ஜி.ஆருக்கு. எத்தனை திருமணங்கள்… கலைஞருக்கு எத்தனை திருமணங்கள்… ஜெயலிலதா திருமணம் செய்துகொள்ளாமல் சோபன்பாபுவுடன் வாழ்ந்ததை அவரே வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்.

அதெல்லாம் தனிப்பட்ட விசயங்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை நடிகர் நடிகைகளைப்பற்றி பத்திரிகைகளில் கிசு கிசு எழுதவார்கள். மக்கள் படிப்பார்கள்.

அதே நேரம் அரசியலுக்கு வந்துவிட்டால் அதை தமிழக மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

பொதுவாக அவர் என்ன செய்வார், நிர்வாகத்திறமை மிக்கவரா, நேர்மையான எண்ணம் கொண்டவரா என்றுதான் பார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்புகளை கமல் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது.

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பலவருடங்களாக ஒரு யூகம் இருந்துகிட்டே இருக்கு. அவரது ரசிகர்கள் கமலின் அரசியல் பிரவேசத்தை எப்படி பார்க்கிறார்கள்..

ரஜினி வருவாருன்னு 25 வருசமா அரசியல் கனவுலேயே இருந்து வந்த ரசிகருங்க, பாவம் பாவம் இப்போ ரொம்ப சோர்ந்துபோயி இருக்காங்க அப்படிங்கிறதுதான் உண்மை.

ரஜினியோடு இணைந்து செயல்படலாம் என்று கமல் அறிவிச்சாரே..அதை ரஜினி ரசிகர்கள் எப்படி எடுத்துக்குவாங்க?

அது அவங்க மனநிலையைப் பொறுத்தது. பொதுவான விசயம்.. எல்லோருக்கும் நல்லது நடக்கும் என்பதால் கமல் தலைமையை அதாவது முதல்வராக வேண்டும் என்று அவர்களும் ஒன்றாக கைகோர்க்கலாம். இதில் போட்டி பொறாமை ஏதுமில்லையே…

கமல் – தஞ்சை சரவணன்

முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தியிருக்கிறார் கமல். அதற்கு கட்சி அமைப்பு வேண்டும். கிராமங்களிலும் கிளை அமைப்பு, பூத் கமிட்டி.. எல்லாம் வேண்டும். உங்கள் மன்றத்தால் அரசியலை தாக்குப்பிடிக்க முடியுமா?

நாங்களும் அதை யோசித்தோம். அதுக்கு கமல் சார் மாற்று ஏற்பாடு  வச்சிருக்காருன்னு நினைக்கிறோம். வெளிப்படையா சொல்லப்போனா தன்னோட அரசியல் நகர்வுகள்ல அவர் எங்களை (மன்றத்தை) நம்பலை. அது குறித்து இதுவரைக்கும் எங்ககிட்ட கருத்தும் கேட்கலை. எப்போதும்போல, உங்க வேலையைப் பாரு.. தொழிலைப் பாருன்னுதான் சொல்றாரு

என்றைக்குமே அவர், எங்களுக்கு தவறான வழிகாட்டுதல் காட்டினதே இல்லை.  வேற நடிகரா இருந்தா விஸ்வருபம் பட பிரச்சினை வந்தபோது ரசிகர்களை தூண்டிவிட்டிருப்பாங்க. ஆனா  அவர் எங்களை, அமைதியா இருங்கன்னு சமாதானம்தான். செய்தார். கிருஸ்ணசாமி சொன்னப்பகூட என் விசயம் நான் பார்த்துக்கிறேன் என்றார்.

அரசியல் குறித்து வேறு ஏற்பாடு வைத்திருப்பார் என்றால், ஏதாவது கட்சியில் கமல் சேர்ந்துவிடுவாரோ..

ரசிகர் மன்றத்தை ஈடுபடுத்தாம என்றால் எங்களை நிராகரிப்பார் என்று சொல்லவில்லை.  அவர் ஏதோ திட்டம் வச்சிருக்காரு. தீவிரமா முடிவு செய்ததும் சொல்வாரு. அதை நாங்க கேட்போம்.

அரசியலுக்கு வந்துவிட்டாலே அடைமொழி அவசியம். கமலுக்கு “புரட்சி ஆண்டவர்” என்று அடைமொழி சூட்டலாமா?

(சிரிக்கிறார்) ஆண்டவரே என்பதையே அவர் விரும்பமாட்டார். ஆனால் “புரட்சி” என்கிற வார்த்தை தமிழக அரசியல் அடையாளமா ஆயிடுச்சு. “புரட்சி ஆண்டவர்”னு அழைச்சுடுவோம். நல்லாத்தானே இருக்கு!

உங்களுக்கு.. உங்களைப்போன்ற மன்ற பொறுப்பாளர்களுக்கு அரசியல் ஆசை.. அதாவது எம்.எல்.ஏ. – எம்.பி. ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா

சமீபத்தில மன்றத்தினருக்கு கமல் சார் போட்ட உத்தரவு என்ன தெரியுமா… “அரசியல் பதவிக்கு ஆசைப்படறவங்க மன்றத்தைவிட்டுபோயடுங்க” என்பதுதான்.

தவிர இயல்பாவே எங்களுக்கு அந்த ஆசை கிடையாது. அப்படித்தான் கமல் எங்களை வளர்த்திருக்காரு. எம்எல்.ஏ., எம்.பி. பதவிகளுக்குத் தகுதியான எத்தனையோ பேர் சமுகத்தில இருக்காங்க. அவங்களை பொறுப்புக்குக் கொண்டுவருவோம். அதுக்கு நாங்களும் பக்கபலமா இருப்போம். மொத்தத்தில சமூகம் நல்லா இருக்கமும். அப்படி இருந்தா எல்லாருமே நல்லா இருக்கலாம்..அதுதான் எங்கள் ஆசை.

(நாளை..  அகில இந்த கமல் ரசிகர் மன்ற பொறுப்பாளர் தங்கவேலுவின் பேட்டி)