சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்த காவல்துறையின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த சென்னை உயர்நீதிமன்றம், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்தால் காவல் துறை எதற்கு? என காட்டமாக கேள்வி எழுப்பினார். இன்று மதியத்திற்குள் மறுபரிசீலனை செய்து உத்தரவிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
உள்ளரங்கில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை கலந்துகொள்வதற்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, காவல்துறை தரப்பில், கடந்த முறை நிகழ்ச்சி நடைபெற்ற போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதால், தற்போதைய நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது என விளக்கமளிக்கப்பட்டது.
இதனால் கோபம் அடைந்த நீதிபதி, உள்ளரங்கில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்தால் காவல் துறை எதற்கு, அரசு எதற்கு? என காட்டமாக கேள்வி எழுப்பிய நீதிபதி, காவல்துறையினரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார். தொடர்ந்து, அண்ணாமலை கலந்து கொள்ளும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.