500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு செல்லாது என்று திடீரெனெ அறிவித்தது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்கள் கூறிவரும் நிலையில் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் இதுகுறித்து என்ன நினைக்கிறார் என்று பலரும் அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள், கடந்த 2014-ஆம் ஆண்டு ஒரு பொருளாதாரம் குறித்த விரிவுரை வகுப்பில் இதுகுறித்து ரகுராம்ராஜனிடம் கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதில் இதுதான்:
சில அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை செல்லாது என திடீரெனெ அறிவிப்பதின் நிமித்தம் அதை அதிகமாக குவித்து வைத்தவர்கள் அதை மாற்றும் முயற்சியில் வலிய வந்து வருமானவரித்துறையிடம் மாட்டிக்கொள்வார்கள் என்று நினைப்பது சரியான பார்வையாக எனக்கு தோன்றவில்லை. இதையெல்லாம் நாம் ஏற்கனவே நாம் முயன்று பார்த்திருக்கிறோம்.
இது போன்ற சூழல் வரும்போது கறுப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றத் தெரியாதவர்கள் அதை கோவில் உண்டியல்களில் போட்டு விடுவதுண்டு அல்லது எரித்து விடுவார்கள், எப்படி மாற்ற வேண்டும் தெரிந்தவர்கள் தங்களிடம் உள்ள பணத்தை சிறு சிறு கூறுகளாக பிரித்து மாற்றிக்கொள்வார்கள். கறுப்பு பணத்தை ஒழிப்பது என்பது எளிதான விஷயம் அல்ல, பெரும்பாலான கறுப்புப் பணம் தங்கமாக மாற்றப்பட்டிருக்கும். அதை கண்டுபிடிப்பதே கடினம். வரிகளை சரியாக கட்டமைத்தாலே கறுப்பு பணத்தைக் குறைக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.