விழுப்புரம்: திமுக அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையின் போது, மேலும் ஒரு சாட்சி, பிறழ் சாட்சியம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது நீதித்துறை மற்றும் காவல்துறையினரின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகி உள்ளது.பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக ஆட்சியில் மீண்டும் அமைச்சராக பொன்முடி இருந்து வரும் நிலையில், அவர்மீதான குற்றச்சாட்டில், சாட்சியம் அளித்த பல அதிகாரிகள், தற்போது உயிருக்கு பயந்து, ஏற்கனவே கூறியது தவறு என்று ‘பல்டி’ அடித்து வருகிறார். அதன்படி, பல்டி சாட்சி எண்ணிக்கை 21ஆக உயர்ந்தது.
கடந்த திமுக ஆட்சியின்போது, உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, தனது அதிகாரத்தை மீறி, விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் அனுமதியை மீறி செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட நிலையில், 2021ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், வழக்கை நீர்த்துப் போக செய்யும் வகையில் விசாரணைகள் நடைபெற்றது.
விசாரணையின்போது, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கின் குறிப்பிட்ட சிலஆவணங்களை குற்றம்சாட்டப் பட்ட நபரான ஜெயச்சந்திரனுக்கு வழங்க மறுத்து உத்தரவிட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயச்சந்திரன் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், செம்மண் குவாரி வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரி கடந்த 2011-12 காலகட்டத்தில் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள நிலையில், அந்த ஆவணங்களை தற்போதைய சாட்சி விசாரணைக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
அதையடுத்து விழுப்புரம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, ஆவணங்களை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பில் அதிகாரிகள் உள்பட 67 சாட்சிக்ள் ஏற்கனவே சாட்சி கூறி உள்ளனர். ஆனால், அவர்கள் தற்போதைய ஆட்சி மாற்றம் மற்றும் மிரட்டல் காரணமாக, பிறழ் சாட்சிகளாக மாறி வருகின்றனர்.
‘பொன்முடி மீண்டும் அமைச்சராக இருப்பதால், ஏற்கனவே அவருக்கு எதிராக சாட்சி அளித்த பல சாட்சிகள் தற்போது சாட்சிகளை கூற மறுத்து வருகின்றனர். தங்களது மறந்துவிட்டது என்றும், கடந்த ஆட்சியின்போது காவல்துறையினரால் மிரட்டப்பட்டோம் என்பது உள்பட பல்வேறு சாக்குபோக்குகளை கூறி வருகின்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் உள்ள 67 சாட்சிகளில் இதுவரை 24 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அவர்களில் 20 பேர் பிறழ் சாட்சி அளித்துஉள்ளனர்.
நேற்று (ஏப்ரல் 22ந்தேதி) நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது, 25ம் சாட்சியாக ஆஜரான ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் கணபதி ஆஜரானார். அவர், நீதிமன்றத்தில் , ‘உயர் அதிகாரிகள் வற்புறுத்தியதன் பேரில் கோப்புகளில் கையெழுத்திட்டேன். எனக்கும் இவ்வழக்கு தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது’ என பிறழ் சாட்சியம் அளித்தார். அதனை பதிவு செய்த நீதிபதி பூர்ணிமா, வழக்கின் விசாரணை நாளை (இன்று) நடைபெறும் என உத்தரவிட்டார்.
இதனால், இவ்வழக்கின் பிறழ் சாட்சிகளின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது. இது நீதித்துறை மற்றும் காவல்துறையினரின் நம்பகத்தன்மையை கேள்விக் குறியாகி உள்ளது.