மத்திய, மாநில அரசுகள்போலவே உள்ளாட்சி அமைப்புகளும் இடைவெளியின்றித் தொடர வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் தெரிவிக்கிறது. அதன் அடிப்படையிலேயே பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டது. உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்கவும், கேள்விகள் கேட்கவும், நிராகரிக்கவும், சரிப்படுத்தவும், தேவையானதைக் கேட்டுப் பெறுவதற்குமான அதிகாரத்தைப் பஞ்சாயத்து ராஜ் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த சட்டத்தின் மூலமே, சிறிய அளவிலான சமூகத்தின் தேவைகளைத் தாங்களே தீர்மானித்து, நிறைவேற்றிக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் அமைப்புமுறையே கிராம சபைகள்.
மக்களின் அதிகாரம் – கிராம சபை
பஞ்சாயத்து ராஜ் சட்டம் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள மக்களுக்கு ஒரு தனிச்சிறப்பான அதிகாரத்தை வழங்கியுள்ளது. அது கிராம சபை எனும் சக்தி. சட்டத்தை இயற்றும் அதிகாரமிக்க சட்டமன்றங்களிலும் நாடாளுமன்ற அவைகளிலும் உறுப்பினர்கள்தான் விவாதிக்க முடியுமே தவிர, குடிமக்கள் அவற்றில் பங்கேற்க முடியாது.
ஆனால், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கேள்வி கேட்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்கியுள்ளது பஞ்சாயத்து ராஜ் சட்டம்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மட்டுமல்ல, செய்த வேலைகளை, செய்யவுள்ள வேலைகளையும் பரிசீலனைக்கு உட்படுத்தும் அதிகாரத்தையும் வழங்கியுள்ளது.
கிராமத்தில் செய்யப்படும் ஒவ்வொரு ரூபாய் செலவும் கிராம சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். செய்யப்பட்ட, செய்யப்படும் ஒவ்வொரு வேலையும், திட்டமும் கிராம சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
தமது பஞ்சாயத்துப் பகுதியில் மக்களுக்காக என்னென்ன புதிய திட்டம் தேவை, என்னென்ன வேலைகள் வேண்டும் என்றெல்லாம் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியும்.
அவற்றைச் செய்யுமாறு ஊராட்சி ஆணையரையும், மாவட்ட ஆட்சியரையும் கேட்க முடியும். ஏன் செய்து தரவில்லை என்று காரணமும் கேட்க முடியும்.
அவர்களும் விளக்கம் அளித்தாக வேண்டும். இத்தகைய அதிகாரங்களைக் கொண்டிருக்கும் கிராம சபை, அதைவிட உச்சமாக ஊராட்சி மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்கும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறது.
நிரந்தர அமைப்பு
இத்தகைய உச்சபட்ச அதிகாரத்தை மக்கள் கையில் எடுத்திருந்தால் கிராம நிர்வாகத்தை நல்லபடியாக நடத்தியிருக்க முடியும். கிராம சபை என்பது கால வரம்பு இல்லாத நிரந்தர அமைப்பு. உள்ளாட்சி பணிகள் குறித்த வரவு – செலவுக் கணக்குகளைச் சமர்ப்பிக்கவும், திட்டங்களை நடத்திடவும் கிராம சபை கூட்டங்கள் கூட்டப்படுகிறது. ஒவ்வொரு கிராமப் பகுதிகளில் உடைந்த குடிநீர்க் குழாயை சரிசெய்ததற்கான செலவு, குடிநீர்த் தொட்டிக்கு பிளீச்சிங் தூள் வாங்கிய செலவு, சாலை போட்ட செலவு உள்ளிட்ட அனைத்துச் செலவுகளும் கிராமசபைக் கூட்டங்களில்தான் அங்கீகரிக்கப்படுள்ளன. கிராம சபையின் அங்கீகாரம் இல்லாவிட்டால் இச்செலவுகள் ஏற்கப்பட முடியாததாகக் கொள்ளப்படும்.
கிராம சபையின் வாயிலாக உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்கள் இவ்வளவு அதிகாரம் செலுத்த முடியும் என்பதை அறிந்துள்ள அரசியல் கட்சிகள் தத்தமது தொண்டர்களை அதில் ஏன் ஈடுபடுத்தவில்லை என்பது புரியாத புதிரே.
கட்சிகள் தத்தமது தொண்டர்களிடம் கிராம சபையின் அதிகாரம் குறித்து விழிப்புணர்வு உருவாக்கியிருந்தால், கிராம சபைக் கூட்டத்தில் முறையாகப் பங்கேற்க அறிவுறுத்தியிருந்தால், கிராமப் பஞ்சாயத்தின் நிலையை மாற்றி அமைத்திருக்கலாம். ஆனால், அரசியல் கட்சிகள், அரசியல் ஆதாயத்துக்காக, பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களை தங்கள் வசப்படுத்தி கிராமசபை முறையாக நடத்தவிடுவதில்லை. ஆனால், மக்களிடையே கிராம சபை அமைப்பின் மீது பெரிய நம்பிக்கை இல்லாதது இந்த அலட்சியத்துக்கான காரணமாகக் கருத வேண்டியிருக்கிறது.
பஞ்சாயத்து அரசின் ஆட்சி அதிகாரத்திற்காகத் தேர்தல்களில் போட்டியிடுபவர்களில் பெரும் பகுதியினர் கிராம சபையின் அதிகாரம் குறித்து அறிந்திராதவர்கள் என்பது நிதர்சனமான உண்மை.
தமிழகத்தை எடுத்துக்கொண்டால் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாமல் இருந்தது. இருந்தாலும், அவ்வப்போது சில சிறப்பு கிராமசபை கூட்டங்கள் அதிகாரிகளைக்கொண்டு நடத்தப்பட்டது. ஆனால், இந்த கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டியவர்களே,அதை புறக்கணித்த அவலங்களும் நடந்தேறியது.
இன்றைய காலக்கட்டத்தில், சமூக அக்கறையுடன் பொதுப் பணிகளில் பங்கெடுத்துவரும் இளைஞர்களும்கூட கிராம சபையின் அதிகாரங்களைச் சரிவர உணர்ந்திருக்கவில்லை. இவர்களுக்க கிராம சபையின் அதிகாரங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தாலோ, அது தொடர்பாக படித்திருந்தாலோ, கிராம சபைக் கூட்டங்கள் மூலம் பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தி இருக்க முடியும். உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படும் நிலையும் உருவாகியிருக்காது.
கிராமங்கள் முழு அதிகாரம் மிக்கவையாக மாறத்தக்க அளவில் கிராம சபைகள் மேலும் அதிகாரப்படுத்தப்பட்ட வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, பஞ்சாயத்து ராஜ் சட்டம் வழங்கியுள்ள வாய்ப்பின் மூலம் கிராம மக்களே அதிகாரம் மிக்கவர்கள் என்ற புரிதலும், அந்த அதிகாரத்தை முறையாகக் கையாளப் பழகுவதும் இனியேனும் நடக்க வேண்டும்.
அப்போதுதான் ஊழலுக்கு வாய்ப்பில்லாத கிராம நிர்வாகத்தை மலர வைக்க முடியும். இந்தியாவில் வலுவான உள்ளாட்சி மீண்டும் மலர வேண்டும் என்றால், காந்தியின் கனவான கிராம சுயராஜ்ஜியம் மலர வேண்டும்… இதற்கு கிராம சபை கூட்டங்கள் அவசியம்.
கிராமசபை குறித்த சந்தேகங்களுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவுகள் வாசகர்களுக்காக இங்கு பதிவிடப்பட்டுஉள்ளது.