ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் தடை செய்யப்பட்ட ‘டெட் லூப்’ இணையத்தில் மீண்டும் வைரலாகி உள்ளது.

1972 ம் ஆண்டு முனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அப்போதைய சோவியத் யூனியன் சார்பில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் கலந்து கொண்டவர் ஓல்கா கார்புட்.

இவரது ஜிம்னாஸ்டிக் திறமைக்கு அந்த ஆண்டு தங்கப்பதக்கம் கிடைத்தது.

ஆனால் இவர் நிகழ்த்திய சாகசத்தை இனி எந்த ஒரு ஜிம்னாஸ்டிக் வீரரும் முயற்சிக்க கூடாது என்று அந்த போட்டி முடிந்த சில நாட்களில் அறிவிக்கப்பட்டது.

பெரிதும் சிறிதுமாக இரண்டு பார்களுக்கு நடுவில் சிட்டுக்குருவி போல் தாவி குத்தித்து தனது திறமையை வெளிப்படுத்திய கார்புட் ஒருகட்டத்தில் சிறிய பாரில் இருந்து பின்னால் இருந்து பெரிய பாருக்கு பார்க்காமலேயே லாவகமாக தாண்டி பிடித்தார்.

ஒரு நொடி தப்பியிருந்தாலும் விபரீதம் ஏற்பட்டிருக்கும் என்பதை உணர்ந்த போட்டி அமைப்பாளர்கள் விளையாட்டுக்குக் கூட இதுபோன்ற விபரீத சாகசங்களை இனி யாரும் செய்யக்கூடாது என்று இதற்கு தடை விதித்தது.

அதுவரை ஓரிரு முறை மட்டுமே ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் இதுபோன்ற சாகசங்கள் நிகழ்த்திக் காட்டப்பட்டது என்றாலும், இந்த சாகசத்துக்கு கார்புட் பெயரே இன்றளவும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியின் வீடியோ சமீபத்தில் இணையத்தில் பதிவேற்றப்பட்டதை அடுத்து இதுவரை சுமார் 9 மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது.