சிகலா வரும் 27ந்தேதி 4 ஆண்டு சிறைத்தண்டனை முடித்து, பெங்களூரு பரபரப்பான அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில், திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் என கூறி, பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.  அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு என தகவல்கள் பரவிய நிலையில், மருத்துவமனை நிர்வாகம் உள்பட  சிலர் சசிகலாவுக்கு கொரோனா இல்லை என்று கூறி வருகின்றன.  ஆனாலும் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, சிறை நிர்வாகமும், மருத்துவமனை நிர்வாகமும் பாதுகாத்து வருகின்றன.

இந்த நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இந்த  நிலையில், சசிகலாவின் மன்னார்குடி வகையறாக்களும், அவரது உடல்நிலை குறித்து ஆடுபுலி ஆட்டம் ஆடி வருகின்றனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

உண்மையிலேயே சசிகலாவுக்கு என்ன ஆச்சு… அவர் வேணும்னே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரெஸ்ட் எடுத்து வருகிறாரோ என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக மற்றும், ஜெ. சொத்துக்களை கைப்பற்றுவதில் சசிகலா குடும்பத்தினரிடைய பகிரங்கமாக மோதல் வெடித்தது.  அதிமுகவை கைப்பற்ற நடைபெற்ற மோதலில், சசிகலா சகோதரர் திவாகரனுக்கும், டிடிவி தினகரனும் இடையே பகிரங்க மோதல் வெடித்தது.

திவாகரன் ஒரு மனநோயாளி என டிடிவி கடுமையாக வசை பாடினார்.  திவாகரனின் மகன் ஜெய்ஆனந்தும் டிடிவியை கடுமையாக விமர்சனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன்,  சசிகலா குறித்து  உண்மைக்குப் புறம்பான தகவல்களை டிடிவி தினகரன்  தெரிவிக்கக் கூடாது, அவ்வாறு பேசினால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.

அதுமட்டுமின்றி சசிகலாவை இனி நான் சகோதரி என்று அழைக்க மாட்டேன்; அவர் என் முன்னாள் சகோதரி என்று கனத்த இதயத்துடன்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

 டிடிவி தினகரன், திவாகரனின் பகிரங்க மோதல் சசிகலா குடும்பத்தில் மட்டுமல்லாது தமிழக மக்களிடையே பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பின்னர்,  இந்த பிரச்சினை அப்படியே அமுங்கி போனது. இந்த நிலையில், தற்போது, சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் மீண்டும் வெடித்துள்ளது.

இதுகுறித்து கூறிய சசிகலாவின் சகோதரர் திவாகரன்,  சசிகலா கடந்த ஒரு வாரகாலமாக காய்ச்சலில் இருந்துள்ளார் என்றும் ஆனால் சிறையில் அவருக்கு சரியான சிகிச்சையளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். மூச்சுத் திணறல் ஏற்பட்டால் சிடி ஸ்கேன் எடுத்து பார்த்து, அதன்பின் சிகிச்சை அளிக்க வேண்டும், ஆனால், அந்த மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதியில்லை என்பதால் தனியார் மருத்துவமனைக்கு செல்ல நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்கிறார்கள் .

27 ஆம் தேதி சசிகலா விடுதலையாக உள்ள நிலையில் , அவருக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் காலதாமதப்படுத்துகின்றனர் என்றும் அதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக சந்தேகம் உள்ளதாக குற்றம் சுமத்தி உள்ளார்.

இதே திவாகரன்தான் சசிகலாவை இனி நான் சகோதரி என்று அழைக்க மாட்டேன் என்று சூளுரைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், சசிகலாவை பொதுச்செயலாளராக அறிவித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை நடத்தி வரும் சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரனோ,  சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாகவும், அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று, திவாகரன் கருத்துக்கு எதிரான கருத்தை தெரிவித்து உள்ளார்.

சசிகலாவை மருத்துவமனையில் சந்தித்த டிடிவி பின்னர் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தற்போது சசிகலா நலமாக உள்ளார். அச்சம் கொள்ளத் தேவையில்லை. சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாக உள்ளது.  அவருக்கு  ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளது. அதனால் அவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். அவரது உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை,  தேவைப்பட்டால் சசிகலாவுக்கு சிடி ஸ்கேன் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

இதற்கிடையில், சசிகலாவின் சகோதரன் திவாகரனின் மகனான   ஜெய் ஆனந்த், சசிகலாவுக்கு என்ன என்ன நடக்குதுனே தெரியல புலம்பியுள்ளார்.  ‘சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்து 12 மணி நேரம் முடிவடைந்திருக்கிறது. ஆனால், இதுவரை அவரை நாங்கள் யாரும் நேரில் பார்க்கவில்லை. அவருக்கு யார் மருத்துவம் செய்து வருகிறார் என்பது கூட எங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

மேல் சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்றாலும், யாரும் சரி வர தகவல்களை சொல்ல மறுக்கிறார்கள். உண்மையில், எங்களுக்கும் இதுவரை செவி வழிச் செய்திகள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. முறையான தகவல்கள் வரவில்லை’  என்று கூறி  உள்ளார்.

வரும் 27 ஆம் தேதி சசிகலா, பெங்களூரு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இருக்கிறார். அன்று அவரது ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க திட்டமிட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் அவர் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவனையில் படுத்த படுக்கையாக இருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன்பாக, தனது உடல்நிலையை தேற்றி, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தவே, சசிகலா உடல்நிலை பாதிப்பு என கூறி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  ஓய்வு எடுத்து வருவதாகவும் சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில்,  கர்நாடக மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார். சசிக்கலாவின் உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், உரிய விசாரணை தேவை என்று புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சசிகலாவை வைத்து, மன்னார்குடி வகையறாக்கள் ஆடிவரும் ஆடு புலி ஆட்டமும் அரசியல் களத்தில் மட்டுமல்லாது, மன்னார் மாஃபியாக்கள் மத்தியிலும் சலசலப்பை உருவாக்கி உள்ளது என்பதை மறுக்க முடியாது.