உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி, அரசு கட்டுப்பாட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் இருப்பது சட்டப்படி சரிதானா என்ற கேள்வியை சமூகவலைதளங்களில் பலரும் எழுப்பி வருகிறார்கள்.
தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதா, அவரது சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. தண்டனையும் அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நால்வரில், ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவர் தண்டனையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டாலும், 100 கோடி அபராதம் அவரது சொத்துக்களில் இருந்து பெறப்படும்.
ஆகவே, “குற்றவாளியான ஜெயலலிதாவின் படங்கள், அரசு அலுவலகத்தில் இருக்கக்கூடாது” என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கெனவே கர்நாடக தனி நீதிமன்றத்தால் ஜெயலிலதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டபோதும் இதே கோரிக்கை எழுந்தது.
அப்போது, “குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களிலோ, அரசு நலத்திட்டங்களிலோ இருக்கக்கூடாது, அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், அரசு பதிலை கேட்டு உத்தரவிட்டது நீதிமன்றம்.
ஆனால் பிறகு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை ஆனார்கள்.
பிறகு உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது. நேற்று வெளியான அந்த தீர்ப்பில்தான் ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைந்துவிட்டதால் சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
இந்த நிலையில், மீண்டும், “குற்றவாளியான ஜெயலலிதா படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கலாமா” என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகிறார்கள்.
அதோடு, ஜெயலலிதாவின் சமாதியை சுற்றி, 5.5 கோடி ரூபாய் செலவில் கட்டடம் எழுப்பி நினைவிடம் அமைக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்தது குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது.
அது மட்டுமல்ல, “தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சமாதி அரசு நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இந்த வளாகத்தில்தான் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அரசு நிர்வாகத்தின் கீழ் வரும் இடத்தில், குற்றவாளியின் சமாதி இருக்கலாமா என்று சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.