நெட்டிசன்:
எது நன்மை?!
என்னுடைய கடந்த காலத்தில் பட்ட அவமானங்களை மறந்து சந்தோஷமாக நிகழ்காலத்தை வாழனும்னு நினைக்கிறேன். ஆனால் மீண்டும் மிண்டும் அதையே அசை போடும் மனம் என்று மகிழ்ச்சி பழகும்?! இது பலரின் தவிப்பு.
வெற்றி தோல்வி, அவமானம் பாராட்டு, நல்லது, தீயது எல்லாம் சேர்ந்தது தான் வாழ்க்கை. ஆனால் பெற்ற பாராட்டுகள், அடைந்த வெற்றிகள் எல்லாம் உங்கள் நினைவில் நிற்காமல் அதிவேகமாக நழுவி விட, பட்ட அவமானங்களும் தோல்விகளும் மட்டும் நச்சென்று நடுமனதில் அமர்ந்து விடுகிறது.
பெரும்பாலும் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், இனி எப்போதும் மகிழ்ச்சியாக மட்டும் இருக்க வேண்டுமென ஒரு முடிவோடு இருந்தாலும் யாரோ அழைத்தது போல மெல்ல கடந்த கால வருத்தங்கள் உங்கள் மனதில் புகுந்து அப்படியே மனமெங்கும் ஆக்ரமித்து, ஏதோ, சுழலில் சிக்கியது போல் அப்படியே மனதில் சுற்றி சுற்றி சுழன்று வரும்.
என்றோ நடந்த ஒரு நிகழ்வு, ஏதோ நீங்கள் எப்போதும் அப்படியே அவமானப்பட்டுக் கொண்டிருப்பது போல், தோல்வி அடைந்து கொண்டே இருப்பது போல் உங்களுக்குள் ஒரு விரக்தியை ஏற்படுத்தி, நீங்கள் நினைத்தது போல் உங்களை செயலாற்ற விடாமல் செய்து விடுகிறது.
நம்முடைய ஆழ் மனது மிக ஆற்றல் வாய்ந்தது. நாம் விரும்புவதை, நாம் விரும்புவதாக அது கருதுவதை, நிறைவேற்றித் தருவதே அதன் தலையாய வேலை. வெற்றிகள் சந்தோஷங்கள் நீங்கள் விரும்பியது போல் நடந்திருக்கிறது. அதனால் நீங்கள் விரும்பியது மாதிரி நடந்த விஷயங்களை உங்கள் ஆழ்மனம் முடிந்த ஒரு வேலையாக எடுத்துக் கொள்கிறது. இப்படி தான் அந்த விஷயம் நடந்திருக்கனும் என்று நாம் நினைத்தது போல் நடந்த வெற்றியும் சந்தோஷங்களும் ஆழ் மனதை பொருத்தவரை chapter close என்பதாக அந்த ஃபைல் மூடப்பட்டு விடுகிறது. அதனால் மனம் அந்த சந்தோஷ நினைவுகளை தன்னிகழ்வாக மீண்டும் மீன்டும் அசை போடாமல் இருந்து விடுகிறது.
அதே நேரம், நீங்கள் நினைத்தது போல் நடக்காமல் இருந்தால், நீங்கள் கேட்டது கிடைக்காமல் இருந்தால் எதிர் பார்த்தது போல் நீங்கள் பாராட்டப் படாமல் இருந்தால், ஆழ்மனம் அதற்கான முற்றும் போடாமல் அதை ஒரு திறந்த கோப்பாக(file), இன்னும் அதற்கான வேலை மிச்சம் இருப்பதாகக் காத்திருக்கிறது. அது இன்னும் நீங்கள் விரும்பியது போல நடக்கப் படவில்லையென மீண்டும் மீண்டும் அது உங்கள் மனதில் நினைவூட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
கணிணியில் திறந்து வைக்கப்பட்ட ஒரு ஃபைல் அதன் செயல் வேகத்தை (processing speed), மெமரி பவரைக் குறைப்பது போல் உங்கள் ஆழ்மனதில் கிடக்கும் இந்த மூடப்படாத ஃபைல்களும் உங்கள் செயல்திறனை, உங்கள் ஆற்றலைக் குறைத்து விடும். ஆழ்மனதைப் பொறுத்த வரை அந்த விஷயம் நீங்கள் நினைத்தது போல் முடிந்தால் தான் அந்த ஃபைலை அது மூடும். உங்கள் மனம் அமைதி பெறும்
அதெல்லாம் சரி, என்றோ கடந்த காலத்தில் நாம் விரும்பாத மாதிரி நடந்த ஒன்றை இப்போது எப்படி நாம் விரும்பிய மாதிரி நடக்க செய்து, அந்த ஃபைலை மூடுவது. அதுவும் அப்போதே நாம் விரும்பியது மாதிரி நடக்காத போது, இப்போது மட்டும் எப்படி நாம் நினைத்த மாதிரி நடக்க செய்ய முடியும்?! இதெல்லாம் நடை முறையில் சாத்தியமா?! என அலுத்துக் கொள்ளும் முன் ஆழ்மனதின் மற்றுமொரு இயல்பு பிரச்னையின் தீர்வாக நம் முன் நிற்கிறது.
நம்முடைய மூளையின் லாஜிக்கல் பகுதி தான், உன்னால் முடியுமா? அதெப்படி சாத்தியம் என இந்த மாதிரியான கேள்விகளை நம்மிடம் கேட்டு நம்மை திணற வைக்கிறது. இந்த கேள்விக்கான பதில், உங்கள் பிரச்னைக்கான தீர்வு உங்கள் மூளையின் மற்றொரு பகுதியான கிரியேட்டிவ் பகுதியில் இருக்கிறது. இது நம்முடைய ஆழ்மனதை, நீங்கள் கற்பனையாக நினைப்பதையும் உண்மையென நம்பச் செய்யும். அதனால் நீங்கள் உங்கள் ஆழ்மனதில் நீங்கள் கேட்டது கிடைத்தது போல், நீங்கள் நினைத்தது நடந்தது போல் அல்லது அந்த மாதிரி நடக்காததிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொண்டதாக மானசீகமாக, கற்பனையாக நினையுங்கள். உங்களுடைய ஆழ்மனதைப் பொருத்தவரை நடந்த ஒன்று உங்களுக்கு நன்மையாக தான் நடந்தது என்றால் அதன் வேலை முடிந்து விட்டதாக அந்தக் கோப்பை மூடி விடும். அந்த எண்ணங்களும் உங்கள் மனதை அரற்றாமல் உங்கள் மனம் அமைதி அடையும்.
கற்பனையாக நினைப்பதை எப்படி மனது உண்மையென நம்பி அந்த கோப்பை மூடும் என்று தோன்றுகிறதா? கொஞ்சம் யோசித்து பாருங்கள். உங்கள் கற்பனை பயம் தானே பெரும்பாலும் உங்களை இப்படி அல்லல் பட செய்கிறது. இப்போது அதே ரீதியில் கற்பனை நிகழ்வுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் எனும் போது மட்டும் ஏன் வியக்கிறீர்கள்.
நடந்த விஷயத்தை நான் நீங்கள் சொல்வது போல் கற்பனையில் நல்லபடி முடித்து வைத்தாலும் எனக்கு நடந்த சங்கடங்கள் உண்மை தானே. அதன் சுவடுகளும் அது விட்டுச் சென்ற அதிர்வுகளும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும் எப்படி மாறும் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் எந்த விஷயமும் எவ்வளவு நனமையானது, எத்தனை நாட்களுக்கு அது நன்மையானதாக இருந்தது என்பது அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது.
எந்த சூழலிலும் மகிழ்ச்சியான மனநிலை உள்ள விவசாயி ஒருவரின் அழகிய குதிரைகள் இரண்டில் ஒன்று ஒரு நாள் எங்கோ சென்று விட்டது. குதிரையை காணவில்லையே என அவர் குடும்பத்தாரும் நண்பர்களும் பதைபதைக்கும் போது அந்த விவசாயி மட்டும், தன் சந்தோஷ மனநிலை சற்றும் மாறாமலே எல்லாம் நன்மைக்கே என்கிறார். குதிரை தொலைந்து போனதில் என்ன நன்மை இருக்கப் போகிறது இவருக்கு என்ன ஆயிற்று என்று அக்கம் பக்கம் அவரைப் பற்றி என்னென்னவோ பேசுகிறார்கள். அதனால் அவர்கள் நிம்மதி தான் போனதே தவிர, அந்த விவசாயி அதை கவலையாக எடுத்துக் கொள்ளாதலால், அவரின் ஆழ்மனம் அதை முடிந்து போன ஒரு விஷயமாக எடுத்துக் கொள்கிறது. அதனால் அவரால் எந்த மனஅழுத்தமும் இல்லாமல் அவருடைய மற்ற வேலைகளைப் பார்க்க முடிகிறது. குதிரை எங்கு போயிருக்கலாம் என்றும் நிதானமாகத் தேட முடிகிறது. சில தினங்களில் காணாமல் போன அந்தக் குதிரை மற்றுமொரு குதிரையோடு காட்டில் நிற்பதைப் பார்த்து அவர் இரண்டையும் தன்னுடன் அழைத்து வருகிறார். இப்போது அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று அரற்றிய ‘அக்கப் பக்கம்’ ஒரு குதிரை காணாமல் போய் இரண்டு குதிரையாகக் கிடைத்து விட்டதே இவர் மிக அதிர்ஷ்டசாலி என்கிறது. ஆனால், அந்த விவசாயி இப்போதும் எல்லாம் நன்மைக்கே என்கிறார் அதே மகிழ்ச்சியான மனநிலையோடு. இப்போது யோசித்து பாருங்கள் ஒரு குதிரை காணமல் போன தீமை என்பது எத்தனை நாள் நீடித்தது. பின் எப்படி அதுவே ஒரு நன்மையானதாக திசை திரும்பியது.
இது இப்படி இருக்க புதிதாக வந்த அந்த காட்டுக் குதிரையில் ஈர்க்கப் பட்ட விவசாயியின் மகன் அதில் ஏறி சவாரி செய்யும் போது, அந்த காட்டுக் குதிரையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்து காலை ஒடித்துக் கொள்கிறான். இப்போது அக்கம் பக்கம் என்ன பேசும்? அந்த விவசாயிக்கு நிச்சயம் கெட்ட காலம் தான் காட்டு குதிரை வந்து அவர் மகனின் காலையே உடைத்து விட்டதே என்கிறது. ஆனால் விவசாயி அந்த சூழலிலும், அதே மகிழ்ச்சியான மன நிலையோடு இருக்கிறார்.
அடுத்த நாள் ராணுவத்திற்கு ஆள் சேர்க்க வருபர்கள் காயப்பட்ட விவசாயியின் மகனை அழைக்காமல் சென்று விடுகிறார்கள். இப்போது அக்கம் பக்கம் மீண்டும் அவரை அதிர்ஷ்டசாலி என்கிறது. இப்படி தொடரும் இந்த கதைக்கு எங்கு முற்றுப் புள்ளி வைக்கிறோமோ அப்போது இது ஒரு சோக கதையாகவோ அல்லது சுபக் கதையாகவோ எப்படி வேண்டுமானாலும் முடிக்கப்படலாம். இந்தக் கதை புதிதல்ல.. ஆனால் இது சொல்லி செல்லும் பாடம், எண்ணங்களை புதுப்பிக்க உதவும் என்பதில் இரண்டு கருத்து இல்லை.
ஒரு நிகழ்வு நன்மையானதா தீமையானதா என்பதை நீங்கள் அந்த நேரத்தை வைத்து முடிவு செய்து உணர்ச்சி வசப்படுகிறீர்கள். ஆனால் உண்மையில் நன்மையும் தீமையும் அந்த நேரத்தை மட்டும் வைத்து முடிவாவதில்லை. ஒரு நேரம் நன்மையாகத் தெரியக் கூடிய ஒன்று அடுத்த நிகழ்வில் தீமையாகத் தெரிகிறது. ஒரு நேரம் தீமையாகத் தெரியக் கூடிய ஒன்று அடுத்த நேரம் நன்மையாக மாறி விடக் கூடும். நாம் எங்கு முற்றும் போடுகிறோம் என்பது நம் மனநிலையை சார்ந்தே இருக்கிறது.
உண்மையில் எந்த ஒரு நிகழ்விலும் சோர்ந்து போகாமல் இயங்க பழகிக் கொண்டால், ஆழ்மனம் அதை நிறைவேறாத ஒரு நிகழ்வாக எடுத்துக் கொண்டு, அதை முடிப்பதற்கான சந்தர்ப்பத்திற்காக, அந்த ஃபைலை திறந்து வைத்துக் கொண்டு, நம் மனதில் அரற்றிக் கொண்டு இருக்காது. மன அழுத்தம் வராது. நம் செயல் திறனும் ஆற்றலும் குறையாமல் மகிழ்ச்சியும் வெற்றியும் வாழ்வில் நிறையும்.
– ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்
Dr.Fajila Azad (International Life Coach – Mentor – Facilitator)
fajila@hotmail.com FB:fajilaazad.dr youtube:FajilaAzad