கொல்கத்தா: மேற்குவங்கத்தைப் பொறுத்தவரை, ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அக்கட்சிக்கு உறுதியான பெரும்பான்மை கிடைக்குமா? என்ற அளவிலேயே, தேர்தலுக்குப் பிந்தைய சில கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க சட்டசபைக்கு, 292 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அந்தவகையில், 147 இடங்களைப் பெற்றால், அம்மாநிலத்தில் ஆட்சியமைக்கலாம்.
கடந்த தேர்தலில், திரிணாமுல் கட்சி, 200 இடங்களுக்கும் மேலாக வென்றிருந்தது. தற்போது, கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில், மம்தாவின் கட்சிக்கு, குறைந்தது 128 முதல் அதிகபட்சம் 176 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவைப் பொறுத்தவரை, அனைத்து கருத்துக் கணிப்புகளுமே, அக்கட்சிக்கு 100 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்றே கணித்துள்ளன. காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணிக்கு, அதிகபட்சம் 25 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.