83 உலகக் கோப்பை வெற்றி மூலம் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை அனைத்து சந்துகளுக்கும் கொண்டு சென்றவர் கபில்தேவ்.

மிகக்குறைந்த வயதில் இந்திய அணிக்காக களமிறங்கியவர் சச்சின் டெண்டுல்கர்.

இவர்கள் ஆடிய முதல் போட்டி துவங்கி இவர்களின் சாதனைகள் மற்றும் பெற்ற விருதுகள் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அவர்களின் பிள்ளைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அப்படி ஒரு சில பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாரிசுகள் என்ன செய்கிறார்கள் :

அமியா தேவ்

அமியா தேவ் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவின் மகள். புது டெல்லியில் பிறந்த இவருக்கு வயது 26. அமியா குர்கானில் உள்ள மௌல்சாரியில் உள்ள ஸ்ரீ ராம் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து இங்கிலாந்தின் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 83 இல் உதவி இயக்குநராக பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.

சமித் டிராவிட்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் மூத்த மகன் சமித் டிராவிட். 16 வயதான இவர் தனது தந்தையைப் போல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்.

14 வயதுக்கு குறைவானவர்கள் அணியில் ஏற்கனவே இடம்பெற்ற சமித், தந்தை ராகுல் டிராவிட்டைப் போல பிரகாசிக்க தன்னை மேலும் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஆருணி கும்ப்ளே

அனில் கும்ப்ளேவின் மகள் ஆருணி கும்ப்ளே. ஆருணி தனது பள்ளிப்படிப்பை கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சோபியா உயர்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ள அவர் ஒரு பட்டய கணக்காளர் என்று கூறப்படுகிறது.

மயாஸ் கும்ப்ளே

அனில் கும்ப்ளேவின் மகன் மயாஸ் கும்ப்ளே. அவருக்கு வயது 17, பெங்களூரில் உள்ள சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார்.

அவரது இன்ஸ்டாகிராம் பயோவில், “வனவிலங்கு மற்றும் பறவைகள் மீது காதல் கொண்டவர், ஸ்டோரி டெல்லர் மற்றும் பறவைகளை அடையாளம் காண்பதில் நிபுணத்துவம் பெற்றவர்” என்று குறிப்பிட்டிருக்கும் இவர் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜுன் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். தந்தையைப் போலவே அவரும் கிரிக்கெட் வீரர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள இவரை சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ₹30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.

சாரா டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர். திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.

மாடலிங் துறையில் நுழைந்திருக்கும் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் AjioLuxe என்ற நிறுவனத்திற்காக மாடலிங் துறையில் அறிமுகம் ஆனதாக பதிவிட்டுள்ளார்.

சனா கங்குலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி. அவருக்கு வயது 20. பெண்களுக்கான லா மார்டினியரில் படித்தார், பின்னர் லொரேட்டோ ஹவுஸ் பள்ளியில் இடைநிலைப் படிப்பை முடித்த அவர் தற்போது லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைப் படித்து வருகிறார்.