சென்னை:
மிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாநில ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, முதல்வர் பேசியது என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில்,  சில மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், கொரோனா ஊரடங்கு வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால்,  ஊரடங்கை மேலும் நீட்டிக்கப்பட வேண்டுமா என்பது குறித்தும், கொரோனாவை முழுமையாக தடுப்பது குறித்தும்,  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர், ஆலோசனை நடத்துகிறார்.
தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு  நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், தமிழக காவல்துறை தலைவர் திரிபாதி, சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காணொலி மூலமாக நடைபெற்ற  இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்களிடையே எடப்பாடி பேசியதாவது,

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா குறைக்கப்பட்டாலும் சென்னையில் அதிகம் உள்ளது.  இருந்தாலும்,  உரிய முறையில் சிகிச்சை அளித்து வருவதால் இறப்பு குறைந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையிலும், கொரோனா தடுப்பு பணியில் அரசு சிறப்பாக செயல்படுகிறது. மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மருந்து கொள்முதல், உபகரணங்கள் கொள்முதல் ஆகியவற்றை அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நாள் முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தடுப்பு நடவடிக் கைக்காக இதுவரை மாநில பேரிடர் மேலாண்மை சார்பில் 14 கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ முறை மருத்துவர்கள் ஆலோசனை கூட்டம் ஒரு முறை நடத்தப்பட்டது.
சென்னை, கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளன.
வெளிமாநிலத்தில் உள்ள தமிழக தொழிலாளர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.
அவசர நிலை கருதி மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகள் அடங்கிய பல்வேறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நோய் முற்றிய பிறகு சென்றால் மருத்துவம் பலன் அளிக்காது.
பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்றவர், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும்.
தொழில்துறையினருடனும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.  சென்னையில் தொழில் பேட்டைகள் 25 சதவீத தொழிலாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
களப்பணியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் சிகிச்சை செலவை அரசே ஏற்கும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷனில் கூடுதலாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு கபசுர குடிநீர் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. 250 சமூக நல கூடங்களில் உள்ள 2 லட்சம் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. ஊரக பகுதி மேம்பாட்டுக்கு கொரோனா சிறப்பு நிதியாக ரூ.300 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்துக்கு 20 லட்சம் முக கவசங்கள் வாங்கப்பட்டுள்ளது. தற்போது 3 லட்சம் முக கவசங்கள் கையிருப்பில் உள்ளன.
தமிழகத்தில் மொத்தம்  70 பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ்  பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 4,018 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், 35,646 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
கொரோனா கிளஸ்டராக கோயம்பேடு சந்தை திகழ்ந்ததால், அது மூடப்பட்டு, தற்காலிக சந்தை திருமழிசையில் திறக்கப்பட்டு உள்ளது.  சென்னை உள்பட தமிழக மக்களுக்கு தேவையான  அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு,  வேளாண் உற்பத்தி, விற்பனைக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனாவை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில்  பல்வேறுதுறை சார்ந்த அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
நோய் பரவலை தடுக்க அரசு தவறிவிட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.