ஜெய்ப்பூர்
அஸ்வின் மன்கேடிங் முறையில் ஜோஸ் பட்லரை அவுட் ஆக்கியது சரி என முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்களில் மிகவும் புகழ்பெற்றவர்களில் ஒருவர் ராகுல் டிராவிட். இவர் இந்திய அணித் தலைவர் பொறுப்பிலும் இருந்துள்ளார். ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் அஸ்வின் மன்கேடிங் முறையில் கிரீஸை விட்டு வெளியே நின்ற வீரர் ஜோஸ் பட்லரை அவுட்டாக்கினார். இது குறித்து ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
ராகுல் டிராவிட், “ஒரு வீரர் கிரீஸை விட்டு வெளியே செல்லும் போது பவுலர் அவருடைய விக்கட்டை வீழ்த்தும் மன்கேடிங் முறை ஏற்கனவே விளையாட்டு விதிகளின்படி ஒப்புக் கொள்ளப்பட்டதாகும். எனவே இதில் ஏதும்தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதனால் அஸ்வின் செய்தது சரி தான்.
ஆனால் அதே நேரத்தில் அவர் பட்லருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். அது தேவை இல்லை எனினும் அவ்வாறு அஸ்வின் செய்திருக்கலாம்.
இதன் மூலம் அஸ்வினின் நடத்தையைக் குறித்து பல விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால் அவர் தனது உரிமைக்குட்பட்ட முறையில் நடந்துக் கொண்டுள்ளார். இதனால் அவரை தவறானவராக கருத முடியாது. அவர் எச்சரிக்கை செய்ய விரும்பவில்லை என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பமாகும். ஆனால் விதி முறைப்படி எச்சரிக்கை அளிக்க வேண்டும் என்பது கிடையாது.
நான் ஒரு பயிற்சியாளராக என்னிடம் பயிற்சி பெறுவோருக்கு தேவையற்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறு யோசனை அளிப்பேன். அதாவது யோசனை தான் அளிப்பேன். அதாவது முதலில் ஒரு முறை எச்சரிப்பது நல்லது என கூறுவேன். ஆனால் நான் எப்போதும் யாருக்கும் அறிவுரை அளித்தது இல்லை.
மேலும் மன்கேடட் விதி மீது எந்த தவறும் உள்ளதாக நான் கருதவில்லை. இந்த விதிமுறையை நீக்கக் கூடாது. அப்படி இல்லையென்றால் அனைத்து விளையாட்டு வீரர்களும் கிரீஸில் நிற்காமல் ஐந்து அடி தள்ளி கூட நிற்பார்கள். இதை தடுக்க இந்த விதி மிகவும் அவசியமாகும்.” என தெரிவித்துள்ளார்.