காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமை நடத்திவரும் நிலையில், தாக்குதலுக்கு 20 நாட்கள் முன்பே பயங்கரவாதிகள் காஷ்மீரில் முகாமிட்டு வேவு பார்த்து வந்ததாகவும் பின்னர் தாக்குதல் நடத்திவிட்டு பாகிஸ்தானுக்கு தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளையில் அவர்கள் நாட்டின் பிற மாநிலங்கள் வழியாக வேறு நாடுகளுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பயங்கரவாதத்தை வேருடன் அறுக்க இந்தியா தீர்மானித்துள்ளதை அடுத்து பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக இருந்துவரும் பாகிஸ்தான் மீது பல்வேறு தடைகளை இந்தியா அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ள இந்தியா, இங்குள்ள பாகிஸ்தானியர்களை சொந்த நாட்டுக்குத் திரும்ப கெடு விதித்துள்ளது.

மேலும், பாகிஸ்தானுடனான தூதரக உறவை முறித்துக்கொண்ட இந்தியா, தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் பரப்பின் மீது பறக்கவும் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பில் பறக்கவும் இரு நாடுகளும் தடை விதித்துள்ளது.

அதேபோல், இந்திய கொடியுடன் வரும் கப்பலுக்கு பாகிஸ்தான் துறைமுகம் மற்றும் கடல் எல்லையில் இடமில்லை என்றும் பாகிஸ்தான் கொடியுடன் வரும் கப்பலுக்கு இந்திய துறைமுகம் மற்றும் கடல் எல்லையில் இடமில்லை என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தவிர, யூ-டியூப் சேனல்கள் போன்றவற்றுக்கும் தடை விதித்திருப்பதோடு சமூக ஊடகங்களையும் கண்காணித்து அவ்வப்போது தடை விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், போர் சூழல் குறித்த ராணுவ ஒத்திகையை மே 7ம் தேதி நாடு முழுவதும் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.