சென்னை: வரும் 21ம் தேதி(ஞாயிறு) நேரக்கூடிய வருடாந்திர சூரிய கிரகணத்தை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பகுதியளவு காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பகுதியளவு கிரகணத்தை, சென்னை, வேலூர், திருச்சி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் முதன்மை இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள் இதுதொடர்பாக கூறியதாவது, “சென்னையில், பகுதிளவு கிரகணத்தை மட்டுமே நம்மால் காண முடியும். இங்கு தெரியும் அதிகபட்ச கிரகணத்தில், சூரியனின் 34% வட்டுவை சந்திரன் மறைத்திருக்கும்.
சென்னையில், ஜுன் 21ம் தேதியன்று காலை 10.22 மணிக்கு துவங்கும் கிரகணம், பிற்பகல் 1.41 மணிக்கு முடிவடையும். அதிகபட்ச கிரகணத்தை காலை11.58 மணிக்கு காணலாம்.
ஜுன் 21ம் தேதியன்று நிகழும் சூரிய கிரகணத்துடன், அடுத்த வருடாந்திர சூரிய கிரகணம், இந்தியாவில் 2031ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதிதான் நிகழும்” என்று தெரிவித்தார்.
இந்தியாவில் இதற்கு முந்தைய வருடாந்திர சூரிய கிரகணங்கள், கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதியும், 2019ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியும் ஏற்பட்டது.