மதுரை,

மிழக கோவில்களில்  கடைபிடிக்கப்படும் தீ விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து பதில் அளிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த அப்துல் கலாம் ஆசாத் சுல்தான் என்ற வழக்கறிஞர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், கோவில் வளாகங்களுக்குள் கடைகள் வைக்க அனுமதிக்கப்படுவதே தீ விபத்துக்கு காரணம் என்றும்,  மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரியகோவில் போன்ற பழம் பெருமை வாய்ந்த கோவில்களில் தீவிபத்து ஏற்பட இதுவே காரணம், ஆகவே கோவில் வளாகங்களில் கடை வைக்க தடை விதிக்க வேண்டும்  என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு,  நீதிபதிகள் சத்திய நாராயணன், தாரிணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், இனிமேல் இதுபோன்ற  தீ விபத்துக்கள்  ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக வல்லுனர் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்..

இதனையடுத்து, தமிழக கோவில்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வரும் 27ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு, இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.