சென்னை: நடிகர் விஜயின் அரசியல் கட்சி மற்ற அதிமுக, திமுக  உள்பட  அரசியல் கட்சிகள் மத்தியில் பீதியை கிளப்பி உள்ள நிலையில், தவெகவின் முதல் மாநாட்டுக்கு காவல்துறை கடுமையான கெடுபிடிகளைக்கொண்ட நிபந்தனைகள் விதித்துள்ளது. அதன் விவரம் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து,  கட்சி உறுப்பினர்கள் சேர்க்கையை தொடர்பாக அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே லட்சக்கணக்கானோர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதையடுத்து கட்சிக்கு அதிகாரப்பூர்வ அனுமதி தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் கொடியை கடந்த மாதம் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து கட்சியின்  முதல் அரசியல் மாநாட்டு நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி விரைவில், விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் இடம் உறுதி செய்யப்பட்டு, அனுமதிக்காக காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. இந்தநிலையில் 33 நிபந்தனைகளோடு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அந்த நிபந்தனைகள் விவரங்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக, தவெகவின்   மாநாட்டிற்கு அனுமதி வாங்குவதற்காக காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து விக்கிரவாண்டியில் விஜய் மாநாடு நடைபெறவுள்ள 85 ஏக்கர் பரப்பளவை போலீசார் ஆய்வு செய்தனர். இதனையடுத்து பல கட்ட ஆலோசனைக்கு பிறகு 21 கேள்விகள் கேட்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதில்,  மாநாடு நடைபெறும் நேரம் என்ன.? மாநாட்டில் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள், மாநாட்டு மேடைக்கான இடத்திற்கு அனுமதி பெறப்பட்டு விட்டதா.? மின்சாரத்திற்கு அனுமதி பெறப்பட்டு விட்டதா.? உணவு எங்கே சமைக்கப்படுகிறது. வெளியிடத்தில் இருந்து கொண்டுவரப்படுகிறதா.? அல்லது மாநாட்டிலையே தயார் செய்யப்படுகிறதா.? மேடையில் அமரும் நிர்வாகிகள் யார்.? நிகழ்ச்சி நிரல் என்ன.? குடிநீர் வசதி என்ன.? மருத்து வசதி செய்யப்படவுள்ளதா.? வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக 21 கேள்விகளை போலீசார் சார்பாக கேட்கப்பட்டிருந்தது.

இதற்கு தவெக சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து,   தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கும் போலீசார் அனுமதி வழங்கினர். இந்த இரண்டு செய்திகளாலும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே தமிழக வெற்றிக்கழகத்திற்கு 33 நிபந்தனைகளை மாவட்ட காவல்துறை விதித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

  1. விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெறவுள்ள மாநாட்டில் மேடை,
  2. மாநாட்டின் தொண்டர்கள் அமரும் இடம்,
  3. வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவற்றின் வரைபடங்களை சமர்பிக்க வேண்டும்.
  4. தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி கேட்டு கொடுக்கப்பட்ட மனுவில் ஒரு லட்டத்தில் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
  5. தற்போது பதில் அளித்துள்ள மனுவில் 50ஆயிரம் பேர் வருவார்கள் என மாறுபட்ட தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என கேட்கப்பட்டுள்ளது.
  6. மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடிய 50ஆயிரம் பேருக்கு மட்டுமே பாதுகாப்பு கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
  7. மாநாட்டிற்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்பாக தவெக சார்பாக தரப்பட்டுள்ள பதிலின் படி 20ஆயிரம் பேர் தான் வர முடியும் நிலை உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் ஏன் இந்த எண்ணிக்கையை கொடுத்தீர்கள்.
  8. மாநாடு நடைபெறும் வளாகம் குண்டும் குழியாக காணப்படுகிறது.
  9. இதனால் அதிகளவு வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
  10. மாநாடு 2 மணி என கூறப்பட்டுள்ளது. 1.30 மணிக்கே மாநாட்டிற்குள் தொண்டர்களை வந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்
  11. மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் குடிநீர், உணவு ஏற்பாடுகள்  செய்ய வேண்டும்
  12. மாநாட்டு மேடை நடைபெறும் இடத்திற்கும் வாகன நிறுத்தும் இடத்திற்கும் இடையே தடுப்பு அமைக்க வேண்டும்.
  13. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மாநாட்டிற்கு வந்து செல்லக்கூடிய வழியில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
  14. விஜய் மாநாட்டிற்கு வருபவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
  15. மாநாடு நடைபெறும் பகுதியில் ரயில்வே தண்டவாளம்  உள்ளது. அங்கு மக்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும்.
  16. தேசிய நெடுஞ்சாலை மற்றும் 6 கிணறுகள் உள்ளது எனவே அந்த பகுதிக்கு மக்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும்.
  17. வாகன நிறுத்துமிடத்தில் இருந்து மாநாட்டு இடத்திற்கு வரும் மக்களுக்கு பாதுகாப்பிற்கு, தன்னார்வலரை பயன்படுத்தவும்.
  18. கொடி, அலங்கார வளைவு, பேனர் போன்றவை கட்டுவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்த அளவிற்கு அதனை தவிர்க்க வேண்டும்.
  19. மழை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் மாநாடு இடத்தில் முன்னேற்றப்பாட்டிற்கு நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்க வேண்டும்.
  20. பொதுப்பணித் துறை பொறியாளரிடம் மாநாட்டின் மேடையின் உறுதித்தன்மையை பெற வேண்டும்.
  21. மாநாட்டிற்கு வரும் விஐபிக்கள் மற்றும் விஜய்யுடன் வருபவர்களுக்கு யார் யாருக்கு சிறப்பு அனுமதி பாஸ் வழங்கப்படுகிறது? போன்ற விவரங்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்
  22. மாநாட்டு எடுக்கப்படும் மின்சாரம் தொடர்பாக மின் பொறியாளர்களிடம் பாதுகாப்புச் சான்றிதழ் பெற வேண்டும்,
  23. எல்இடி அமைக்க வேண்டும்.
  24. சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கவும் வேண்டும்.
  25. மாநாட்டில் தீயணைப்பு, மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கான வாகனங்களை அங்கு அனுமதி பெற்று நிறுத்தப்பட வேண்டும்.
  26. மாநாடு நடைபெறும் பகுதிக்குவருபவர்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு வராத வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும்.
  27. மாநாட்டிற்கு வரும் கர்ப்பிணிகள், முதியோர்களுக்கு தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
  28. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மாநாடு நடத்த வேண்டும்.
  29. கூம்பு ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது
  30. மாநாட்டின்போத வானவேடிக்கை நடத்தக் கூடாது  என்பன உள்ளிட்ட 33 நிபந்தனைகளோடு மாநாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.