ஐமைக்கா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 416 ரன்கள் எடுக்க, பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியோ 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறி கொடுத்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளின் நிலை இப்படி பரிதாபகரமாய் இருந்த சமயத்தில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மேற்கிந்திய தீவுகளை அப்படி பாடாய்படுத்தி எடுத்தவர் இந்திய வேகப்பந்து நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா.
இந்திய அணியின் ஹனுமா விஹாரி தனது முதல் டெஸ்ட் சதத்தை நிறைவுசெய்தார். அவர் அடித்தது 111 ரன்கள். பலரும் எதிர்பாராத வகையில், இப்போட்டியில் வேகப்பந்து புயல் இஷாந்த் ஷர்மா 57 ரன்களுடன் அரைசதம் பதிவு செய்தார்.
இவர்கள் தவிர, கேப்டன் கோலி 76 ரன்களும், மாயங்க் அகர்வால் 55 ரன்களும் எடுத்தனர். ரிஷப் பண்ட் 27 ரன்களுக்கும், ஜடேஜா 16 ரன்களுக்கும் அவுட். முடிவில் 416 ரன்களுக்கு இந்திய இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் கதைதான் சோகமானது. கடந்த டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸ் போலவே, இந்த டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் மாட்டினார்கள். பும்ரா அவர்களை உண்டு இல்லை என ஆக்கிவிட்டார். நல்லவேளை, ஆட்டநேரம் முடிவுக்கு வந்ததால் தப்பித்தனர் என சொல்லும் அளவிற்கு நிலைமை இருந்தது.
அந்த அணியின் ரோஸ்டன் சேஸ் மற்றும் ஷர்மார் புரூக்ஸ் போன்றோர் டக் அவுட். ஹெட்மேயர் மட்டுமே சற்றே கவுரவமாக 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதுவரை 7 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் மட்டுமே கிடைத்துள்ளது அந்த அணிக்கு. இதில் கூடுதலாக கிடைத்த ரன்கள் 13.
அவர்களின் 7 விக்கெட்டுகளில் பும்ராவுக்கு கிடைத்ததோ 6 மற்றும் ஷமிக்கு 1. மூன்றாம் நாள் ஆட்டத்தில் அவர்கள் குறைந்தபட்சம் 100 ரன்களையாவது எட்டுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.