கிங்ஸ்டன்,
தகவல் தர மறுத்த காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஆல் ரவுண்டர் ரஸ்ஸலுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலக ஊக்கமருந்து தடுப்புக் கழக விதிமுறைகளின்படி தங்கியிருக்கும் இடம் குறித்த தகவலை தர மறுத்ததற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஆல் ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்ஸலுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு ஜன. 1, ஜூலை 1 மற்றும் ஜூலை 25 என மூன்று முறை, தான் தங்கி யிருக்கும் இடம் குறித்த தகவலை ரஸ்ஸல் பதிவு செய்யத் தவறினார்.
ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளின் கீழ் இத்தகைய தவறு செய்வது, ஊக்கமருந்து சோதனையில் பிடிபட்டதற்கு சமமாகும்.
இதையடுத்து, விதிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறிய குற்றத்துக்காக ரஸ்ஸல் ஓராண்டுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
2017 ஜன. 31ம் தேதி முதல் அமலாகும் இந்தத் தடை 2018 ஜன. 30ம் தேதியுடன் முடிவுக்கு வரும்.
இதனால், பிப். 9ம் தேதி தொடங்க உள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இஸ்லாமாபாத் யுனைட்டட் அணிக்காக ரஸ்ஸல் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக இங்கிலாந்து வேகம் ஸ்டீவன் பின் சேர்க்கப்படுவதாக இஸ்லாமாபாத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் டி20 தொடரிலும் ரஸ்ஸலுக்கு பதிலாக மாற்று வீரரை சேர்ப்பது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.