கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தனிமைப்படுத்துதலில் இருப்பதற்கு வீடுகள் இல்லாததால், 7 இளைஞர்கள் மரங்களில் வசிக்க தொடங்கி இருக்கின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ், வெகு வேகமாக பரவி வருகிறது. தினசரி வைரசால் தாக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந் நிலையில், சென்னையில் இருந்து மேற்கு வங்கத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் சொந்த ஊரான வான்கிடி என்ற கிராமத்துக்கு திரும்பி உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக, அவர்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் தனிமைப்படுத்துதலுக்காக அவர்களின் வீடுகளில் அறை இல்லை. இதையடுத்து, அவர்களை ஒரு மரத்தின் மீது 14 நாட்கள் தங்க கிராமத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் கடந்த 5 நாட்களாக மரத்தில் தங்கி இருக்கின்றனர். மரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அமைப்பானது, யானைகள் நடமாட்டத்தை அறிந்து கொள்வதற்காக கிராம மக்கள் ஏற்படுத்தியதாகும்.

இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்தவரான விஜய் சிங் லாய் கூறி இருப்பதாவது: அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் இல்லை. வீட்டில் தனித்தனியாக தங்க அறைகள் இல்லை. எனவே மரத்தின் வெவ்வேறு கிளைகளில் பட்டைகளை கட்டி ஏழு வீடுகளை தனித்தனியாக ஏற்பாடு செய்தோம்.

தங்கள் வீடுகளில் உள்ளவர்கள் அரிசி மற்றும் பருப்பு வகைகளை மரத்தின் அடியில் வைத்து வருகின்றனர். அவர்கள் பகலில் கீழே சென்று சமைத்து மீண்டும் மரத்தின் மேல் செல்கிறார்கள். அவர்களுக்கு எந்த நோயும் இல்லை. ஆனால் வெளியில் இருந்து, அதை தனித்தனியாக வைத்திருக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. எனவே நான் இந்த ஏற்பாட்டை செய்தேன் என்றார்.