டெல்லி: தமிழக சட்டமன்ற தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்து உள்ளார். மேலும், கொரோனா தொற்று அச்சுறுத்தல் இருந்தாலும் சரியான நேரத்தில் அடுத்த ஆண்டு மே, ஜூனுக்குள் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் உறுதிபட கூறியுள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, பீகாரில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் மற்றும், இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள தமிழகம் உள்பட பல மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார்.
பீகார் தேர்தல் அனுபவங்கள் குறித்து கூறிய சுனில் அரோரா, கொரோனாவுக்கு மத்தியில் நடந்த பீகார் தேர்தல், தங்களுக்கு கடினமான மற்றும் சவாலான பணியாக இருந்ததாவும், தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதையடுத்து அடுத்தகட்ட சவாலாக, தமிழகம், மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு, அடுத்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டியது இருக்கிறது. தனது பதவிக்காலத்தில் நடத்தப்பட வேண்டிய தேர்தல்கள் அனைத்தும் சிறப்பாக நடத்தி முடிக்கப்படும்.
தேர்தல் என்பது வழக்கமாக நடைபெறும் ஒரு நடைமுறை என்பதால், அந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் ஒருபோதும் பின்வாங்காது, கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நடைபெறும் தேர்தல்களும் சரியான நேரத்தில் நடத்தி முடிக்கப்படும் என்று கூறினார்.
மேலும், சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், தேர்தல் ஆணையம் தேவையான உள்ளார்ந்த பணிகளை தொடங்கி விட்டது என்றும் தெரிவித்தார்.