முர்ஷிதாபாத், மேற்கு வங்கம்
மேற்கு வங்க அமைச்சர் ஜாகிர் ஹுசைன் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் அமைச்சரும் அவர் ஆதரவாளர்களும் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் தொழிலாளர் நலத்துறை இணையமைச்சராக ஜாகிர் ஹுசைன் பதவி வகித்து வருகிறார். இவர் சமீபத்தில் திருணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் மொர்ஷிதாபாத் மாவட்ட திருணாமுல் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.
நேற்று இவர் கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். இது நடந்து சில மணி நேரம் கழித்து அவர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நிமிட்ரியா ரயில் நிலையத்தில் நடை மேடையில் நேற்று இரவு சுமார் 9.45 மணிக்கு அவர் தனது ஆதரவாளர்களுடன் நடந்து சென்ற போது இவர் மீது அடையாளம் தெரியாத வெடிகுண்டு வீசி தாக்கி உள்ளனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் அமைச்சர் உள்ளிட்டோர் காயம் அடைந்துள்ளனர். இவர் கொல்கத்தா ரயிலில் பயணம் செய்ய இரண்டாம் நடைமேடையில் சென்றுக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரின் கைகள் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தோர் அனைவரும் முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அமைச்சர் உயிருக்கு ஏதும் அபாயம் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.