பெண் எம்.பி.யின் குழந்தை பெயர்-‘’கொரோனா’’
உலகம் முழுவதையும் ’’அரசாளும் ‘’ கொரொனாவின் பெயரை, இந்தியாவில் அண்மைக் காலமாகப் பிறந்துள்ள குழந்தைகளுக்கு அதன் பெற்றோர் சூட்டி அழகு பார்த்து வருகிறார்கள்.
‘’கொரோனா குமார்’’ ‘’கொரோனா குமாரி’’ ‘’கோவிட்’’ போன்ற பெயர்களோடு, இந்த நோயுடன் தொடர்புடைய ‘லாக்டவுண்’’ ‘’ சானிடைசர்’’ ஆகிய பெயர்களும் பிறக்கும் குழந்தைகளுக்குச் சூட்டப்படுவது பேஷனாகி விட்டது.
பெண் எம்.பி. ஒருவரே தனக்குப் பிறந்த குழந்தைக்கு ’’கொரோனா’’ என்று பெயர் வைத்துள்ளார்.
அந்த எம்.பியின் பெயர், அபரூபா பொட்டார்.
திரினாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
மே.வங்க மாநிலம் ஆரம்பாக் மக்களவை தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
ஏற்கனவே அவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
இந்த நிலையில் அபரூபா, அண்மையில் இரண்டாவதாகவும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
அந்த மாநிலத்தில் பொதுவாக அனைவருக்கும் இரு பெயர்கள் இருக்கும்.
பெற்றோர், தாங்கள் விரும்பிய பெயரை, தங்கள் குழந்தைக்கு முதலில் சூட்டுவார்கள்.
பின்னர், வீட்டில் உள்ள பெரியோர், இன்னொரு பெயர் வைப்பது வழக்கம்.
அந்த வழக்கப்படி, எம்.பி.அபரூபாவும், அவர் கணவர் முகமது சாஹிர் அலியும் சேர்ந்து, புதிதாகப் பிறந்த தங்கள் மகளுக்கு ‘கொரோனா’’ என்று பெயர் வைத்துள்ளனர்.
அந்த குழந்தைக்கு இன்னொரு பெயரைச் சூட்ட முதல் அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் ஆலோசனை கேட்டுள்ளனர், இந்த தம்பதியர்.
– ஏழுமலை வெங்கடேசன்