கொல்கத்தா: பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அடித்துக் கொலை செய்யும் கும்பல்களுக்கு கடிவாளம் போடும் வகையில், மேற்குவங்க மாநில அரசாங்கம் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

அதன்படி, அத்தகைய குற்றத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் அளிக்க வகை செய்கிறது இந்த சட்டம்.

எளிய மற்றும் சமூகப் பாதுகாப்பற்ற நபர்களுக்கு போதிய அரசியலமைப்பு பாதுகாப்பை அளிக்கும் வகையிலேயே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், இந்த சட்டத்தின் மூலம், சம்பந்தபட்ட சட்டவிரோத வன்முறை கும்பல்களுக்கு அச்சம் ஏற்பட்டு, அவர்கள் இத்தகைய கொடுஞ் செயல்களை மேற்கொள்வதிலிருந்து விலகி நிற்பார்கள் என்று தொடர்புடைய வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தப் புதிய சட்டம், மேற்குவங்க சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்தப் புதிய சட்டத்தின்படி, மாநில அரசால் ஒரு கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.