கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் 14 பேர் உயிரிழந்து 2.5 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக மேற்கு வங்க மாநிலத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து தாமோதர் பள்ளத்தாக்கு திட்ட அணைகள் திறக்கப்பட்டன. ஆகவே ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, புர்பா பர்தமான், பாஸ்சிம் பர்தமான், பாஸ்சிம் மேதினிபூர், ஹூக்ளி, ஹவுரா, தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய 6 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

சுமார் 2.5 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  கடும் வெள்ளத்தினால் சுவர் இடிந்து விழுந்ததாலும் மின்சாரம் பாய்ந்ததாலும் இதுவரை 14 பேர் உயிரிழந்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹூக்ளி மாவட்டத்தில் ராணுவம் மற்றும் விமானப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள மக்கள் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் பலர் மீட்கப்பட்டு வருவதுடன், ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப் படுவதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுமாறு அந்தந்தப் பகுதி அமைச்சர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்,