கொல்கத்தா:

மேற்குவங்க மாநிலத்திலும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், 4-ம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனக் கூறியிருந்தார். மேலும் இது தொடர்பான விதிமுறைகள் 18-ம் தேதிக்கு முன்பு வெளியிடப்படும் எனக் கூறியிருந்தார்.

அதன்படி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்தன. இந்தநிலையில் மேற்குவங்க மாநிலத்திலும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.