கொல்கத்தா: மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 2 மக்களவை எம்.பி.க்கள் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளனர். இதனால் மாநிலத்தில் பாஜகவின் பலம் 75 ஆகு குறைந்துள்ளது.
294 தொகுதிகளைக்கொண்ட மேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான போட்டி நிலவியது. பலவ இடங்களில் வன்முறையும் தலைவிரித்தாடியது. இந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தாலும் மாநிலத்தில், 213 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் சாதனை படைத்தது.
இந்த தேர்தலில் பாஜக சார்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். அவர்களில், பல முன்னாள் எம்எல்ஏக்கள் இடம்பெற்றிருந்ததுடன், ஒரு மத்திய அமைச்சருடன் சேர்த்து 4 எம்.பி.க்களையும் களமிறக்கியது. இவர்களில் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றளனர். அதுபோல, 19 முன்னாள் எம்எல்ஏக்களும் தோல்வி அடைந்தனர்.
நந்திகிராமில் மம்தாவை வென்ற சுவேந்து அதிகாரி உள்பட மொத்தம் 77 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். தற்போது, தேர்தலில் வெற்றிபெற்ற 2 எம்.பி.க்களும் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இதனால், அந்த 2 தொகுதிகளுக்கும் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் எழுந்துள்ளது. அதுபோல பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் 2 குறைந்துள்ளது.